சேலம் மாணவியை குண்டர் சட்டப்படி சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சேலம் மாணவியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.;

Update: 2017-08-02 22:00 GMT
சென்னை,

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி. நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டு பிரசுரத்தை வினியோகித்து, மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் ஜூலை 12–ந் தேதி சேலம் போலீசார் இவரை கைது செய்தனர்.

இவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், தேச நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சேலம் போலீஸ் கமி‌ஷனர் கடந்த மாதம் 17–ந் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவரது தந்தை மாதையன், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், ‘என் மகள் வளர்மதியை அரசியல் காரணங்களுக்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். முறையான அனுமதியை பெற்று, சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தாத வகையில் என் மகள் போராட்டங்களில் ஈடுபட்டார். இவ்வாறு போராட்டம் நடத்த அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது. எனவே, வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனு மீதான விசாரணையை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்