சேலத்துக்குள் நுழையவிடாமல் மு.க.ஸ்டாலினை கைது செய்தது கவுரவப் பிரச்சினையா? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

மு.க.ஸ்டாலினை சேலத்துக்குள் நுழையவிடாமல் கைது செய்தது சட்டம் – ஒழுங்கு பிரச்சினையா?, அல்லது கவுரவப் பிரச்சினையா? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Update: 2017-08-01 22:00 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான, எடப்பாடியில் கொங்கணாபுரம் அருகில் உள்ள கச்சராயன்பாளையம் ஏரியை தி.மு.க.வினர் தூர்வாரி சீரமைத்துள்ளனர்.

ஆனால், அந்த ஏரியில் அ.தி.மு.க.வினர் முறைகேடாக மணலை அள்ளினர். இதனால் அந்த ஏரியைப் பார்வையிடுவதற்காக கடந்த ஜூலை 27–ந் தேதி மு.க.ஸ்டாலின், கோவை வழியாக சேலம் செல்ல முற்பட்டார்.

ஆனால் வழியிலேயே அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. அறிவித்த மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால் மு.க.ஸ்டாலின் சேலத்துக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உண்மையில் மனித சங்கிலி நடைபெறவிருந்த இடத்துக்கும், மு.க.ஸ்டாலின் செல்லவிருந்த கச்சராயன்பாளையம் ஏரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதல்–அமைச்சரின் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் செல்லக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்துடன் அவரை தடுத்து கைது செய்துள்ளனர்.

எனவே, வரும்காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளைத் தி.மு.க. தூர்வார, தமிழக அரசு தடை விதிக்கக்கூடாது. எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. அதுபோல தூர்வாரும் பணிகளைப் பார்வையிடச் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக அரசு அதிகாரிகள், போலீசார் எக்காரணம் கொண்டும் தடுக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மு.க.ஸ்டாலின் அதிகளவில் தொண்டர்களோடு சென்றதாலும், அதனால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது’ என்றார்.

அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், ‘எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சர் அந்தஸ்தில் உள்ளவர். அவருக்கு ‘இசட்’ பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் எங்கு சென்றாலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். திடீரென அவர் எங்கும் செல்லவில்லை. சட்டம்–ஒழுங்குக்கும் எவ்வித குந்தகமும் விளைவிக்கவில்லை. தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தி.மு.க. செய்து வருகிறது. அதை தமிழக அரசு வேண்டுமென்றே தடுத்து வருகிறது’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘சட்டம்–ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல் துறையின் கடமை. ஆனால் மு.க.ஸ்டாலின் எந்த வகையில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமாக இருந்தார்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை சேலத்துக்குள் நுழையவிடாமல் கைது செய்தது சட்டம் – ஒழுங்கு பிரச்சினையா?, அல்லது கவுரவப் பிரச்சினையா? என்று தமிழக அரசு வக்கீலை பார்த்து கேள்வி எழுப்பினார்.

பின்னர், இந்த வழக்கிற்கு 4–ந் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்