‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக 27–ந் தேதி நடைபெறும் தி.மு.க. மனித சங்கிலி போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘நீட்’ தேர்வை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த நிலையில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அதனைத் தடுப்பதற்கு முழு முனைப்புடன் சட்டம் இயற்றவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுத்த தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை.அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தாலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசின் சமூகநீதிக்கு எதிரான கொள்கைகளாலும் ‘நீட்’ தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்து மாணவர்களின் மருத்துவப் படிப்புக்குத் தடை போட்டுள்ளது.
மத்திய அரசின் ‘நீட்’ தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 27–ந் தேதி தி.மு.க.வும், தோழமைக் கட்சியினரும் இணைந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
உண்மை நிலையை உணர மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு ஓங்கிக் குரலெழுப்பி உணர்த்த வேண்டியுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தி.மு.க.வும், தோழமை கட்சியினரும் இணைந்து நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தின் விளைவாக மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் வகையில், நம்முடைய பங்களிப்பு முழுமையாகவும் முனைப்புடனும் இருக்க வேண்டும்.ஒரு கை ஓசை எழுப்புவதில்லை. ஒற்றை மனிதரின் கரங்கள் சங்கிலியாவதில்லை. ஒத்த கருத்து, ஒருமித்த எண்ணம், ஒன்றுபட்டு போராடும் மனம் கொண்ட தோழமை சக்திகளுடன் இணைந்து நின்று மனித சங்கிலியை சீன பெருஞ்சுவர் போல நீளமாக்கும் பணி, தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளான தொண்டர்களை சார்ந்தது.
தி.மு.க.வின் அனைத்து அணிகளும் இந்த மனித சங்கிலியில் இணைய வேண்டும். குறிப்பாக மாணவரணியினர் அதிகளவில் பங்கேற்பதுடன், தங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்யவேண்டும். தோழமைக் கட்சியினரை வரவேற்று அவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.மத்திய–மாநில ஆட்சியாளரின் எவ்வித அடக்குமுறையும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்காமல் எங்கள் கரங்கள் பாதுகாக்கும் என்று சொல்லும் அளவில் நமது கைகள் இணையட்டும். ‘நீட்’ எனும் கொடுந்தடை தகரட்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.