‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் போதை ஆசாமிகள் அட்டகாசம் பெண் பயணிகள் அச்சத்துடன் பயணம்
20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் 8.55 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் இரண்டாம் வகுப்பு எஸ்.9 பெட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.
ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டதும், அவர்கள் மற்ற பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் மது போதையில் தள்ளாடியபடி சத்தமிட்டு பாட்டு பாடினர். எஸ்.9 பெட்டி முழுவதையும் ஆக்கிரமித்து அவர்கள் ரெயில் பெட்டிக்குள் அங்கும், இங்குமாக அலைந்து திரிந்தனர்.
இரவு 11 மணியை கடந்தும் அவர்கள் அட்டகாசம் நிற்கவில்லை. அவர்கள் அடித்த கும்மாளத்தால் அந்த பெட்டியில் குடும்பத்துடன் பயணித்தவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.
ஒரு கட்டத்தில் இதை பொறுத்துக்கொள்ள முடியாத பயணி ஒருவர் அவர்களிடம், தம்பிகளா... நேரம் ஆகி விட்டது. எல்லோரும் தூங்குகிறார்கள். சத்தம் போடாமல் இருங்கள் என்று கூறினார். ஆனால் அவர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து மற்றவர்களுக்கு காது கூசும் வகையில் கேலியும், கிண்டலுமாக தங்களுக்குள் பேசியபடி இருந்தனர்.
ரெயில் பெட்டிக்கு ரோந்துக்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், டிக்கெட்களை பரிசோதிக்க வந்த டி.டி.ஆரும் அவர்களின் செயல்களை கண்டுகொள்ளாததால் ஒரு பயணி தன்னுடைய செல்போன் ‘வாட்ஸ் அப்’ மூலம் இந்த செய்தியை நண்பர்களுக்கு அனுப்பி எப்படியாவது இதை தடுத்து நிறுத்தி, பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இந்த ‘வாட்ஸ் அப்’ தகவல் வேகமாக பரவி ஒரு கட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கே சென்று விட்டது.
இரவு 12 மணியளவில் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த பெட்டிக்கு வந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த போதை ஆசாமிகளை, இனி இது போன்று செய்தால் ரெயிலில் இருந்து இறக்கி விட்டு விடுவோம் என்று எச்சரித்து விட்டு மட்டும் சென்று விட்டனர். அதன்பிறகு அந்த போதை ஆசாமிகள் தங்களது இருக்கையில் அமைதியாக அமர்ந்து விட்டனர்.
இது குறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறியதாவது:-
ரெயில் பயணம் பாதுகாப்பானது என்பதற்காக தான் எல்லோரும் குடும்பத்துடன் ரெயிலில் பயணிக்கிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். ரெயில்வே நிர்வாகம் குறைந்தபட்சம் இது போன்று குடி போதையில் கூட்டமாக வருபவர்களை கண்காணித்து அவர்கள் ரெயிலில் பயணம் செய்யாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட மாநிலங்களில் தான் இது போன்று சம்பவங்கள் நடக்கும். தற்போது தமிழகத்திலும் இதுபோன்று நடப்பது வேதனையாக இருக்கிறது. குடி போதையில் பயணிகள் பயணம் செய்தால் குடும்பத்துடன் வருபவர்களும், தனியாக ரெயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கும் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.
மது அருந்தியபடி ரெயிலில் எந்த பயணி பயணம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். ரெயில் பெட்டியில் ஆங்காங்கே புகார் கொடுக்க தொலைபேசி எண் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த எண்கள் செயல்படுவதே இல்லை. எங்களை பொறுத்தவரையில் ‘வாட்ஸ் அப்’ தான் கைகொடுத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.