கொடுங்கையூர் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்து விட்டார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2017-07-20 22:15 GMT

சென்னை,

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 15–ந்தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது பேக்கரியின் ‌ஷட்டரை திறந்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்தது.

இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விருதுநகரைச் சேர்ந்த ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரர் தீயில் கருகி பலியானார். மேலும் 3 தீயணைப்பு வீரர்கள், 6 போலீஸ்காரர்கள் உள்பட 48 பேர் காயம் அடைந்தனர். அனைவருக்கும் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பரந்தாமன் (வயது 67) என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மேலும், கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அபிமன்யூ(40) என்பவரும் சிகிச்சை பலன் இன்றி நள்ளிரவு உயிரிழந்தார். இதன்மூலம் கொடுங்கையூர் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தா மணி கூறியதாவது:–

தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு தனி மருத்துவக்குழு அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (நேற்று முன்தினம்) பரந்தாமன் உயிரிழந்து விட்டார். அவருக்கு 82 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் இருந்தது.

ஆனால் அபிமன்யூவிற்கு 50 சதவீத தீக்காயமே இருந்தது. அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பலியானார். இங்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேரில் தற்போது 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்