சிறப்பு வசதி பற்றி புதிய வீடியோ வெளியானது; பெங்களூருவில் இருந்து சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2017-07-19 00:30 GMT

பெங்களூரு,

இவர்களில் சசிகலா, இளவரசி ஆகியோர் அதே வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், சுதாகரன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதை அதே துறையின் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் முழுவதுமாக மறுத்தார்.

இந்த நிலையில் ரூபா மற்றும் சத்திய நாராயணராவ் ஆகிய 2 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் சசிகலாவுக்கு தனி ‘செல்’லில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப் படங்கள் நேற்றுமுன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சசிகலா சிறை வளாகத்தின் ஒரு பகுதியில் கையில் ஒரு பையுடன் அங்குமிங்குமாக நடமாடும் புதிய தெளிவான வீடியோ காட்சிகள் நேற்று ஒரு கன்னட செய்தி தொலைக்காட்சியில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோ காட்சிகளில் இளவரசி மற்றும் பெண் வார்டர்கள் சசிகலாவுடன் இருக்கிறார்கள். இளவரசியுடன் சசிகலா ஏதோ பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. பெண் வார்டரிடமும் சசிகலா உரையாடுவது போன்ற அந்த வீடியோ காட்சியில் சசிகலா சுடிதாரும், இளவரசி புடவையும் அணிந்து இருக்கிறார்கள்.

சிறையில் சசிகலாவின் செயல்பாடு குறித்து புதிய, புதிய வீடியோ காட்சிகள் தொடர்ந்து வெளியாகி வருவதால் அடுத்து என்ன வீடியோ காட்சி வெளிவரும் என்று மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் சிறை வீடியோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருவது கர்நாடக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சிறை தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிடும் நபர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

தொடர் சர்ச்சை காரணமாக சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு, சிறை மாற்றப்பட்டால் துமகூருவில் உள்ள மகளிர் சிறைக்கு சசிகலாவை மாற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்