என் கண் எதிரே மகளை பறி கொடுத்து விட்டேனே மாணவியின் தந்தை உருக்கம்

தஞ்சை அருகே வல்லத்தில் நடந்த விபத்தில் அரியலூர் மாவட்டம் டி.பழூரை அடுத்த இருகையூரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாலினி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-07-14 22:30 GMT
மாணவி திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மாலினியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக அவருடைய தந்தை துரைராஜன்திருச்சி சென்றார்.
பின்னர் மாலினியை அழைத்துக்கொண்டு துரைராஜன் கும்பகோணம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி தஞ்சை வந்து அங்கிருந்து அரியலூர் செல்ல முடிவு செய்தார். பஸ்சில் துரைராஜன் இருக்கையில் அமர்ந்து வந்தார்.

மாலினி இடம் இல்லாததால் டிரைவர் சீட் அருகே நின்று கொண்டு வந்தார்.
இதில் சரக்கு ஆட்டோ மீது பஸ் மோதிய வேகத்தில் அதில் இருந்த இரும்புகம்பிகள் பஸ்சில் இருந்த பயணிகளை குத்தி கிழித்தது. அப்போது ஒரு கம்பி மாலினியின் இடுப்பில் குத்தி சில அடி தூரத்திற்கு தள்ளிக்கொண்டு பஸ்சின் இருக்கையில் வந்து மோதியது. மேலும் மாணவியின் உடலில் பல்வேறு இடங்களிலும் இரும்பு கம்பிகள் குத்தியது. இதில் மாணவி மாலினி சம்பவ இடத்திலேயே, அவருடைய தந்தை துரைராஜன் கண் எதிரில் பரிதாபமாக இறந்தார். மகளின் உடலை பார்த்து துரைராஜன் கதறி அழுதார்.

இது குறித்து துரைராஜன் கூறுகையில், “பஸ் வேகமாக வந்தது. பாலத்தில் வந்த போது ஓரத்தில் சரக்கு ஆட்டோ பழுதாகி நின்றது. அப்போது பஸ்சின் பின்பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டக்டர் சரக்கு ஆட்டோ நிற்கிறது என்று டிரைவரிடம் சத்தமாக கூறினார். ஆனால் டிரைவர் அதனை கவனிப்பதற்குள், கண் இமைக்கும் நேரத்தில் பஸ், சரக்கு ஆட்டோ மீது மோதியது. கல்லூரி விடுமுறைக்காக வீட்டிற்கு அழைத்து வந்த போது எனது மகள் பலியாகி விட்டாள் என கண்ணீருடன் கூறினார்.

மேலும் செய்திகள்