விடுதலைப்போராட்ட தியாகிகள், தலைவர்களுக்கு அரசு சார்பில் விழா அமைச்சர் அறிவிப்பு

தியாகிகள், தலைவர்களுக்கு அவர்களின் பிறந்த நாளன்று அரசு சார்பில் விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்தார்.

Update: 2017-07-14 22:15 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப்போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபங்களில் அவர்களின் பிறந்த நாளன்று தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்படும்.

காந்தியடிகள், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜர், பாரதியார், ஜீவானந்தம், வீரபாண்டிய கட்டபொம்மன், கவிஞர் கண்ணதாசன், ஒண்டி வீரன், சிங்காரவேலர், பக்தவச்சலம், கோபால் நாயக்கர், வள்ளல் அதியமான், தில்லையாடி வள்ளியம்மை, ராமலிங்கம் பிள்ளை, குன்றக்குடி அடிகளார், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ராபர்ட் கால்டுவெல், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சீனிவாசராவ், வெள்ளியத்தேவன், உமறுப்புலவர், சுப்பிரமணிய அய்யர், சங்கரலிங்கனார், உடுமலை நாராயணகவி ஆகிய பெரியவர்கள் பலரின் பிறந்த நாளில் அவர்களின் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்படும்.

கொடிக்காத்த குமரன் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அவரின் பிறந்தநாள் விழா, அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும். விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அரசு விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படும்.

எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் பயிற்சி மற்றும் குறும்படம் தயாரிக்க ஆண்டுதோறும் வெளிமுகமை மூலம் நவீன தொழில்நுட்பக் கருவிகள் பெறுவதற்காக நிதி உயர்த்தி வழங்கப்படும். எம்.ஜி.ஆர்.அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் ஆண்டு தோறும் குறும்படம் தயாரிப்பதற்கு நிதி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு பொருட்காட்சி நடைபெறுவதை கிராம அளவில் விளம்பரப்படுத்த மின்னணுத் திரையுடன் கூடிய விளம்பர வாகனம் வாங்கப்படும். இதற்காக ஓட்டுனர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் வாகன சீராளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

அரசு அச்சகங்களில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிற்றுண்டிப்படி 200 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு அச்சகங்களில் பணிபுரியும் பெண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தையல்கூலி தொகை 350 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், ஆண் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தையல்கூலித் தொகை 800 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்