‘செம்மொழி’ சிறப்பு பெற்ற தமிழுக்கு நேர்ந்த கொடுமை: தமிழ் அறிஞர்கள் எதிர்ப்பு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முத்திரையில் தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2017-07-12 23:15 GMT
சென்னை,

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி தமிழ் குடி” எனும் சிறப்பை பெற்ற தமிழ் இனத்தின் தாய்மொழியான தமிழுக்கு கடந்த 2004-ம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதேபோல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற மொழிகளும் செம்மொழி பட்டியலில் இணைக்கப்பட்டன.

செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட மொழிகளின் வளர்ச்சிக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, செம்மொழி உயராய்வு மையத்தை மைசூரில் அமைத்தது. அப்போது, தமிழக முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, தன்னாட்சி தகுதியுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னைக்கு கொண்டுவந்தார்.

சென்னை தரமணியில் இயங்கி வரும் அந்த நிறுவனத்தில், தமிழின் தொன்மை மற்றும் தனித்தன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழுக்கு இந்நிறுவனம் பெருமை சேர்க்கும் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், இந்த நிறுவன முத்திரையிலேயே தமிழுக்கு இடமில்லை என்ற வேதனையான உண்மை வெளியாகியுள்ளது.

அதாவது, சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முத்திரையில், இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

இந்த தகவல், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

“இந்தி திணிப்பின் உச்சம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த செய்தி தமிழ் அறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கொதித்து எழ செய்துள்ளது. தாய் நாட்டிலேயே தமிழுக்கு இந்த நிலையா? என்று தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உடனடியாக, தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன முத்திரையில் தமிழுக்கு முதலிடம் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் ஆகும். 

மேலும் செய்திகள்