சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பதுங்கலா?
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 11 பேர் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியான தகவலை உளவு பிரிவு அதிகாரிகள் மறுத்தனர்.
சென்னை,
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 11 பேர் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியான தகவலை உளவு பிரிவு அதிகாரிகள் மறுத்தனர்.
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக நிதி திரட்டி அனுப்பியதாக ராஜஸ்தான் மாநில போலீசார் முகமது இக்பால் என்பவரை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த ஆரூண் ரசீத் என்பவரையும் ராஜஸ்தான் மாநில போலீசார் கடந்த 3–ந்தேதி பிடித்துச் சென்றனர்.அதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கடலூர் பரங்கிபேட்டையை சேர்ந்த அகமது என்பவரையும் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
இந்தநிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 11 பேர் சென்னையில் பதுங்கி இருப்பதாகவும், அவர்களை கண்காணித்து வருவதாகவும், அவர்களை கைது செய்ய ராஜஸ்தான் மாநில போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே தகவல் பரவியது. நேற்று இந்த தகவல் செய்தியாகவும் வெளியானது.
இதுதொடர்பாக தமிழக உளவுப்பிரிவு மற்றும் சென்னை நகர உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டி கொடுத்ததாக முகமது இக்பால் என்பவரை மட்டும் தான் ராஜஸ்தான் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். கொண்டித்தோப்பை சேர்ந்த ஆரூண் ரசீத் என்பவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை தான் நடந்து வருகிறது. அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பதை உறுதிபடுத்துவதற்காக சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவருக்கும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இன்னொருவருக்கும் ராஜஸ்தான் மாநில போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட அகமது என்பவரிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தான் நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 11 பேர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுபோன்ற தகவல் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ராஜஸ்தான் மாநில போலீசாரும் 11 பேரை கண்காணிப்பதாக எங்களிடம் தெரிவிக்கவில்லை. யூகங்களின் அடிப்படையில் அந்த தகவல் பரப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு உளவுப்பிரிவு அதிகாரிகள் கூறினர்.