கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது.

Update: 2017-07-08 22:45 GMT
மேட்டூர்,

நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 30-ந் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இந்த தண்ணீர் நேற்று மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று அணையின் நீர்மட்டம் 20.09 அடியாக இருந்தது. அதாவது அணைக்கு வினாடிக்கு 37 கனஅடி வீதம் வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது. இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக சேலம் மாவட்டத்தையும், தர்மபுரி மாவட்டத்தையும் நீர்வழி போக்குவரத்து மூலம் இணைக்கும் பண்ணவாடியில் பரிசல் போக்குவரத்து கடந்த 2 மாதத்துக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. பொதுமக்கள் பரிசலில் பயணம் மேற்கொண்டனர்.

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.

அவர்கள் அருவிகள், காவிரியில் குளித்து மகிழ்ந்தனர். சிலர் பரிசலில் சென்று இயற்கை அழகை ரசித்தனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

மேலும் செய்திகள்