மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி சென்னையில், கட்டுமான துறையினர் உண்ணாவிரதம்

மணல் தட்டுப்பாட்டை நீக்கக்கோரி சென்னையில் கட்டுமானத்துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-07-06 22:45 GMT

சென்னை,

கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் மணல் குவாரிகளை ஏற்படுத்தி மணல் தட்டுப்பாடின்றி வினியோகிக்க வேண்டும். அதேபோல் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத்துறையை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தொடங்கிவைத்தார். இதில் அகில இந்திய கட்டுனர் மற்றும் வல்லுநர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் முன்னாள் தலைவர் பொன்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அகில இந்திய கட்டுனர் மற்றும் வல்லுநர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக கட்டுமானத்துறை இயங்காமல் இருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இதனால் பின்தங்கி உள்ளது. கட்டுமானத்துறைக்கு ஏராளமான பிரச்சினைகள் இப்போது இருக்கிறது. அதில் முக்கிய பிரச்சினையாக மணல் தட்டுப்பாடு தான் உள்ளது.

பத்திரப்பதிவு கட்டணத்தை ஒரு சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பத்திரப்பதிவு கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும். மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் முன்னாள் தலைவர் பொன்குமார் கூறும்போது, ‘கட்டுமானத்தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் மணலுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இடைத்தரகர் மூலம் மணல் விற்பனை செய்தபோது மணல் விலை அதிகமாக இருந்தது என்பதால் தான் அரசு மணல் விற்பனையை ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் அரசாங்கம் இடைத்தரகர் விற்ற விலையை விட பன்மடங்கு அதிகமான விலை வைத்துள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலத்துக்கு மணல் கடத்தல் நடக்கிறது. அதை தடுத்து மணல் குவாரிகளை அதிகளவில் ஏற்படுத்தி தடையின்றி மணல் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்