சென்னை போரூர் மேம்பாலம் 6 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது ஏன்?
சென்னை போரூர் மேம்பாலம் 6 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது ஏன்? என்று தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–
உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்:– வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2011–ம் ஆண்டு மாதவரத்தில் ரூ.95 கோடியில் புறநகர் துணை பஸ் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. வேளச்சேரி – பரங்கிமலை இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரெயில் திட்டம் இன்னும் முடியாமல் உள்ளது. இந்த திட்டங்களின் நிலை என்ன?. போரூர் மேம்பாலம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் 6 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது ஏன்?.முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– போரூர் மேம்பால திட்டம் தொடங்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால், அவர்கள் அதற்கான இடத்தை கையகப்படுத்தவில்லை. நில உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்றதால், வழக்கு இப்போது முடிந்து பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.