மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும்

தமிழக பொருளாதார சீர்குலைவுக்கு காரணமான மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக கவர்னர் உத்தரவிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-07-03 19:43 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 48 மணல் குவாரிகளின் மூலம் தமிழக அரசுக்கு 2016–17–ம் ஆண்டில் கிடைத்த வருவாய் ரூ.86.33 கோடி மட்டுமே என்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையின்படி, அவருக்கு மணல் குவாரியிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.1.35 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.

கூலிக்கு மணல் அள்ளிக்கொடுக்கும் சேகர்ரெட்டி நிறுவனமே ஆண்டுக்கு சுமார் ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் போது, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமைந்துள்ள மணல் குவாரிகளின் உரிமையாளரான அரசுக்கு ஆண்டுக்கு ரூ.86 கோடி மட்டும் தான் வருவாய் என்பதை எப்படி ஏற்க முடியும்.

மேலும், ஆண்டுக்கு ஆண்டு மணல் தேவை அதிகரித்து வரும் நிலையில், 2011–12–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012–13–ம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து இப்போது ரூ.86.33 கோடியாக குறைந்திருக்கிறது.

உண்மையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும் ரூ.100 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.36,500 கோடி வருமானம் கொட்டுகிறது. ஆனால், அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் கொள்ளையடித்தது போக எஞ்சிய சிதறலான ரூ.86.33 கோடி மட்டும் தான் தமிழக அரசின் கஜானாவில் சேர்க்கப்படுகிறது. எனவே, தமிழகத்தின் பொருளாதார சீர்குலைவுக்கு காரணமாக திகழும் மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக கவர்னர் ஆணையிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்