‘பேனர் கலாசாரத்தை வேரறுக்க உறுதி எடுப்போம்’ தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பேனர் கலாசாரத்தை வேரறுக்க உறுதி எடுப்போம் என்றும் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2017-07-01 22:45 GMT
சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. என்பது சுயமரியாதையுள்ள அரசியல் இயக்கம். இங்கே காலில் விழுந்து காரியம் சாதித்து கொள்ளலாம் என்கிற அடிமை மனோபாவம் இருக்கக்கூடாது என்பதால் காலில் விழும் கலாசாரத்தை தவிர்க்க வேண்டும் என்பதையும், அவரவர் பெற்றோர் உள்ளிட்ட மூத்தோர் மீதான அன்பின் காரணமாக கால்தொட்டு வணங்குவதை தவிர, அரசியல் லாபக் கண்ணோட்டத்தில் அந்தச் செயலை செய்யக்கூடாது என்பதையும், அதற்கு பதிலாக திராவிட இயக்கம் கற்றுத்தந்த கம்பீரமான வணக்கத்தினை தெரிவித்து, வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.

என்னுடைய இந்த வேண்டுகோளை ஏற்று, தி.மு.க.வினர் பலரும் காலில் விழும் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டனர். ஒருசிலர் அன்பின் மிகுதி காரணமாகவும், தொடர்ந்து மேற்கொண்ட பழக்கத்தின் காரணமாகவும் என் காலில் விழ எத்தனித்தபோது, அவர்களை தடுத்து நிறுத்தி, இனி இப்படி செய்வதாக இருந்தால், என்னை சந்திக்க வரக்கூடாது என உரிமையுடன் கோபத்தை வெளிப்படுத்தினேன். இதன் காரணமாக, காலில் விழும் கலாசாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.

திராவிட இயக்கத்தின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு துணைநிற்கும் தி.மு.க.வினரிடம் வெற்று ஆடம்பரத்தை தவிர்ப்பதற்கான மற்றொரு அன்பு கோரிக்கையையும் முன்வைத்தேன்.

பொது நிகழ்ச்சிகளிலும், நேரில் சந்திக்கும் போதும் பயன்தராத பொன்னாடைகளை அணிவிப்பதை தவிர்த்து, அதற்கு பதில், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் நல்ல புத்தகங்களை பரிசளிக்கும்படி, என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினேன். அந்த கோரிக்கையை ஏற்று, என்னுடைய பிறந்தநாளான மார்ச் 1-ந்தேதி தொடங்கி, இன்றைய நாள் வரை பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்புகளிலும் பொன்னாடைக்கு பதில் புத்தகங்களையே பலரும் வழங்கி வருகின்றனர்.

அன்புப் பரிசாக குவிந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கி, எதிர்கால தலைமுறையினர் பயன்பெறுகின்ற பணியினை தி.மு.க. சார்பில் மேற்கொண்டு வருகிறோம். பயனற்ற ஆடம்பரமான செயல்பாடுகள் மக்களிடம் வெறுப்பை உண்டாக்கி, நம்மை அவர்களிடமிருந்து அன்னியப்படுத்தி விடும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது, ஆடம்பரமும் அருவருப்பும் கலந்த பேனர் கலாசாரத்தைத்தான். வெற்று ஆடம்பரத்தைத் தவிர வேறெதுவும் இந்த பேனர் கலாசாரத்தில் இருப்பதில்லை. தேவையற்ற ஆடம்பரமான இத்தகைய செயல், பொதுமக்களிடம் கடும் வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளன.

மக்களின் வெறுப்புக்கு தி.மு.க.வினர் இடம் கொடுக்கவோ, அவர்களின் வெறுப்புக்கு ஆளாகவோ கூடாது என்பதற்காக, ஆடம்பரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாசாரத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

முழுமையாக தவிர்த்தால், தி.மு.க. நடத்தும் விழா பற்றிய விவரம் பொதுமக்களுக்குத் தெரியாது என நினைத்தால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் நேரத்தையும் சுட்டிக்காட்டும் வகையில் ஒருசில இடங்களில் மட்டும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேனர்களை கவனத்துடன் வைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், ஆடம்பர பேனர்களை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பல மாதங்களான நிலையில் அதனை அலட்சியப்படுத்துவது போல அண்மைக்காலமாக சில நிகழ்ச்சிகளிலும் பேனர் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

அதிக அளவில் பேனர் வைப்பதும், அதிலும் தங்களுக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் தி.மு.க. நிர்வாகிகள் பேனர் கலாசாரத்தை வளர்ப்பதும், தலைமையின் முடிவுக்கு எதிரானதும், மக்கள் மனதில் வெறுப்பை வளர்க்கின்ற செயலுமாகும் என்பதை உணர்த்த விரும்புகிறேன். உங்களில் ஒருவன் என்ற முறையில், இந்த பேனர் கலாசாரத்தை கைவிடவேண்டும் என மீண்டும் ஒருமுறை அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த வேண்டுகோள் பயனளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இனியும் யாரேனும் பேனர் கலாசாரத்தை கடைப்பிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

பேனர் கலாசாரத்தை வேரறுக்க உறுதி எடுப்போம். மக்களுக்காக நாம் மேற்கொள்கின்ற பணிகளும் அதன் மூலம் கிடைக்கின்ற ஆதரவும்தான் நிலையானது. ஆடம்பர விளம்பரங்களால் மக்களின் ஆதரவை பெற முடியாது என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். கவர்ச்சி மாய வலையில் விழாமல், கடமைகளை நிறைவேற்றி மக்களின் மனங்களை வெல்வோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்