தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2017-07-01 00:00 GMT
சென்னை,

பலத்த எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக உளவுப்பிரிவு போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

அவருடைய பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே வேளையில் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

தமிழக புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. யார்? என்பதை முடிவு செய்வதற்காக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம் இரவு ஆலோசனையை முடித்துக்கொண்டு கிரிஜா வைத்தியநாதன் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு கொடுத்து, மத்திய அரசு அனுமதியோடு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று காலையில் தகவல் பரவியது.

எந்த நேரத்திலும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு போலீசார் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை சென்றுவிட்டார். தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவும் மும்பையில் இருக்கிறார். இதனால் டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

டி.கே.ராஜேந்திரனும் அவரது அலுவலகத்தில் பணி நியமன ஆணைக்காக ஆவலோடு காத்திருந்தார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக பூங்கொத்துக்களை வாங்கிக்கொண்டு உயர் அதிகாரிகளும் தயார்நிலையில் இருந்தார்கள்.

இந்த நிலையில் இரவு 8 மணியளவில் டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்