வெளிநடப்பு செய்வதை தவிர்த்து எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன்

சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வதை தவிர்த்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Update: 2017-06-16 21:32 GMT
காஞ்சீபுரம்

காஞ்சீபுரத்தில் நடந்த ஒரு விழாவில் மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை மத்திய அரசு தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு நன்மை செய்துள்ளது. ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் தான் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விகித முறை கொண்டு வருவதால் பல்வேறு பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.

மதிப்பளிக்க வேண்டும்

சட்டமன்றத்தில் சபாநாயகர், முதல்–அமைச்சர் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களின் கருத்தை சொல்ல அனுமதிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அதேபோல் எதிர்க்கட்சிகளும் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வதை தவிர்த்துவிட்டு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. அரசு கடந்த 3 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார். அது முற்றிலும் தவறானது. எண்ணற்ற திட்டங்களை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செய்துள்ளது.

பிளாஸ்டிக் அரிசி

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதனை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மாட்டிறைச்சி சாப்பிட மத்திய அரசு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. ஆனால் தாய் போல் வணங்கும் பசுவை விவசாயத்திற்கு என ஏமாற்றி வாங்கி சென்று இறைச்சிக்கு பயன்படுத்துவதை தவிர்க்க தான் சட்டம் இயற்றியுள்ளது.

சில கட்சிகள் கடவுள் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்றுவதைவிட, ஜனாதிபதி அவர் சார்ந்த மதத்தின் தலைவரை சந்தித்ததை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்