பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்களின் நிலை என்ன? சட்டசபையில் காரசார விவாதம்

பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்களின் நிலை என்ன? என்பது குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.

Update: 2017-06-15 23:45 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

க.பொன்முடி:-பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தவர்கள் 40 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பென்ஷன் முறையாக செல்லவில்லை. ‘நீட்’ தேர்வை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிறுத்திவைத்தது தி.மு.க. தான்.

கோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வரும்

அமைச்சர் சி.வி.சண்முகம்:- இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தான் தடை விதித்தது.

க.பொன்முடி:- சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததற்கு காரணம் தி.மு.க. தான்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மட்டும் தான், ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கேட்டு போராடுகிறது.

க.பொன்முடி:- அதற்கு தி.மு.க. உறுதுணையாக இருக்கும். பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு அளித்த ரூ.4,600 கோடி நிதியை இன்னும் பெறவில்லை. ‘நீட்’ தேர்வு முறையில் தமிழக அரசின் நிலை என்ன?.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- அது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் ‘நீட்’ தேர்வு முடிவு வர இருக்கிறது. உள் ஒதுக்கீடு வழங்கலாமா? என ஆலோசித்து வருகிறோம். கோர்ட்டு தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

விடிவு கிடைக்கும்

க.பொன்முடி:- தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்-அமைச்சர் கேட்டுள்ளார். ஆனால், ‘மதுரையில் தான் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று அமைச்சர் ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் அமைச்சர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையா?.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- தங்கள் பகுதியில் வேண்டும் என அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் இடம் வேண்டும். அது தஞ்சாவூர் அருகேயுள்ள செங்கிப்பட்டியில் உள்ளது. மத்திய ஆய்வு குழு அறிக்கையில் அந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளதால், முதல்-அமைச்சர் அதை வலியுறுத்தினார்.

அமைச்சர் எதிர்ப்பது ஏன்?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே என்று கேட்கிறீர்கள்?. அதற்காக 5 இடம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசும் தமிழகத்துக்கு வந்து அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டு சென்றார்கள். ஆனால், ஒவ்வொரு இடத்திற்கும் ஏதோ ஒரு குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். தஞ்சாவூர் செங்கிப்பட்டி சரியாக இருக்கும் என்ற கருத்தை நாம் சொன்ன போது, அதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஏற்கனவே குறிப்பிட்ட 5 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும்.

வெள்ளை அறிக்கை வேண்டும்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- முதல்- அமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட முதல்-அமைச்சர் முன்வருவாரா?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

2011-2012-ம் ஆண்டு முதல் 2015-2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மொத்தம் 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப்பணிகள் முடிவடைந்த பின்னர், அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 315 அறிவிப்புகளுக்கான திட்டப்பணிகளில் பெரும்பாலானவை முடியும் தருவாயில் உள்ளது. நீங்கள் சந்தேகம் கேட்டதால் விளக்கம் தருகிறோம். ஜெயலலிதா அறிவித்த அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில், 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் எந்தப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

(இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் நிறைய பேர் கையை தூக்கி, தங்கள் தொகுதியில் திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பதை செய்கை மூலம் காண்பித்தனர்)

அனுமதிக்க முடியாது

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:- நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த ஹிஸ்டரி (வரலாறு) வேண்டும். இப்படி புத்தகத்தில் இருப்பதாக காண்பித்தால் எப்படி?.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், சாதிக்க முடியாது. இது சாதனை ஆட்சி. எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றால், நிறைவேற்றிய திட்டங்களை பாருங்கள்.

(உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் கையில் இருந்த புத்தகத்தை சட்டசபை செயலாளர் பூபதி மூலம் துரைமுருகனிடம் கொடுத்தார். அவர் அந்தப் புத்தகத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். அவர் ஒவ்வொரு பக்கமாக படித்து பார்க்க தொடங்கினார். பின்னர், மு.க.ஸ்டாலின் எழுந்து பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.)

சபாநாயகர் ப.தனபால்:- முதல்-அமைச்சர் தன்னிடம் உள்ள விவரத்தை கொடுத்துள்ளார். அதை படித்து பாருங்கள். இந்த விவாதத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தொடருவதற்கு நேரமில்லை. நான் அனுமதிக்க முடியாது.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

மேலும் செய்திகள்