அரசு வக்கீல்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு; தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
விழுப்புரம் மாவட்டம் சேர்ந்தனூரை சேர்ந்த வக்கீல் நடராஜன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
சென்னை,
விழுப்புரம் மாவட்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த 23 பேரை அரசு வக்கீலாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு புறம்பாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு வக்கீல் பதவி என்பது நீதி பரிபாலனத்தில் பொறுப்பான பதவி ஆகும். இதுபோன்ற பணியிடங்களை நிரப்பும்போது வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எனவே, இந்த நியமனங்களை ரத்து செய்து விட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் அரசு வக்கீல்களை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை அடுத்த மாதம்(ஜூலை) 8–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.