தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சருடன் ஆலோசனை நடத்தியது தவறு இல்லை; வெங்கையா நாயுடு பேட்டி

தமிழக தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதில் தவறு இல்லை என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2017-06-10 22:45 GMT

சென்னை,

மத்தியில் நடைபெறும் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின், கடந்த 3 ஆண்டு சாதனையை விளக்கும் விதமாக, ‘உங்கள் நம்பிக்கை, உங்கள் விசுவாசம்–நம் நாடு முன்னேறி செல்கிறது’ என்ற புகைப்பட கண்காட்சி நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சியை, சென்னை வேளச்சேரி ரெயில் நிலையத்தில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஊழல் இல்லை

மத்திய அரசின் கடந்த 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக உள்ளூர் மொழிகளில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசு நிர்வாகத்தில், கடந்த 3 ஆண்டுகளில் ஊழல், முறைகேடுகள் என்று எதுவும் நடக்கவில்லை. ஊழல் நடந்தது என்று எதிர்கட்சியினரால் கூட குற்றம் சுமத்த முடியவில்லை.

ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், காலை, மதியம், இரவு என்று எந்நேரமும் ஊழல் நடந்தது. 2 ஜி ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஊழல் என்று பட்டியலிட்டு கொண்டே போகலாம். மோடியின் நடவடிக்கையினால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ், மரியாதை கிடைத்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய மந்திரிகள் நேரடியாக சென்று அந்த மாநிலங்களின் முதல்–மந்திரிகள், மந்திரிகளுடன் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, அதற்காக நிதியை உடனடியாக வழங்குகின்றனர். இந்த முறை முன்பு இல்லை.

தவறு கிடையாது

தமிழக முதல்–அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கடந்த மாதம் நானும், மத்திய அரசு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை நடத்தி நிதிகளை உடனடியாக வழங்கினோம். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், ஜெயலலிதா இருந்திருந்திருந்தால், மத்திய மந்திரி இப்படி தமிழக தலைமை செயலகத்துக்கு வந்திருப்பாரா? என்று சிலர் கேட்கின்றனர். அவர்கள் முழு விவரம் தெரியாதவர்கள்.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. அதில், அவரும், நானும் கலந்து கொண்டோம். அதுவும் ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஆதரவை கேட்போம்

இதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:–

கேள்வி:– ஜனாதிபதி தேர்தலுக்காக பிற அரசியல் கட்சிகளின் ஆதரவை கேட்பீர்களா?

பதில்:– அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் கேட்போம்.

கேள்வி:– மதசார்பற்ற தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக தேர்வு செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே?

பதில்:– அப்துல்கலாம் இந்த மண்ணின் மைந்தர். தலைசிறந்த மதசார்பற்ற தலைவர். அவரை 2–வது முறையாக ஏன் ஜனாதிபதியாக தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சியும், பிற அரசியல் கட்சிகளும் மறுத்தன? மதம் சார்ந்த கட்சிகளுடன் கை கோர்த்துக்கொண்டு, மதசார்பற்ற தலைவரை தேர்வு செய்யவேண்டும் என்று காங்கிரஸ் கூச்சலிடுகிறது.

ஒருங்கிணையவேண்டும்

கேள்வி:– அ.தி.மு.க. மூலம் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

பதில்:– எங்கள் கட்சிக்கு என்று தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார். பிற தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களை நேரடியாக சென்று சந்திக்கின்றனர். கட்சியில் உறுப்பினர்களாக இணைக்கின்றனர்.

அப்படி இருக்கும்போது, அ.தி.மு.க. மூலம் தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அந்த கட்சி தற்போது பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.வையும் நம்பி, 5 ஆண்டு ஆட்சியை மக்கள் வழங்கியுள்ளனர். ஜெயலலிதாவின் கனவு, லட்சியம் நிறைவேற வேண்டும் என்றால், அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒருங்கிணையவேண்டும். ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றவேண்டும். இதுதான் எங்களது (பா.ஜனதாவின்) விருப்பம்.

தலையிட முடியாது

கேள்வி:– தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியபோது, அவர்களை பிரதமர் சந்திக்கவில்லையே?, திரையுலக பிரமுகர்களை சந்திக்கத்தான் பிரதமருக்கு நேரம் இருக்கும்? எங்களை சந்திக்க நேரம் இல்லை என்று விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனரே?

பதில்:– விவசாயம், விவசாயிகளின் பிரச்சினை என்பதெல்லாம் மாநில அரசுக்கு உட்பட்டது. இதற்கான நிதியைத்தான் மத்திய அரசு வழங்கும். மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட வி‌ஷயத்தில் மத்திய அரசு தலையிடாது. வெள்ள பாதிப்புக்காக ரூ.2,400 கோடி வழங்கப்பட்டது. வறட்சி நிவாரண நிதியும் வழங்கப்பட்டு உள்ளது. அதனால், விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது மாநில அரசின் கடமை. இதில், மத்திய அரசு மீது குற்றம் சொல்லக்கூடாது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்