பணம் பறிக்கும் ஆதாரங்களாக பார்ப்பதால் திருப்பூர் துணி ஆலைகள் ஒடிசாவில் முதலீடு செய்ய முடிவு

பணம் பறிக்கும் ஆதாரங்களாக பார்ப்பதால் திருப்பூர் துணி ஆலைகள் ஒடிசாவில் முதலீடு செய்ய உள்ளன என தமிழக அரசு மீது டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2017-06-10 16:45 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஏராளமான சலுகைகள்

ஒடிசா மாநிலம் ராம்தாஸ்ப்பூர் பகுதியில் மிகப்பெரிய தொழில் நகரை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. மொத்தம் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள தொழில் நகரத்தில் துணி ஆலைகளை நிறுவுவதற்கான ஜவுளி பூங்கா அமைக்க 70 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராம்தாஸ்ப்பூர் ஜவுளி பூங்காவில் துணி ஆலைகளை அமைக்க திருப்பூரை சேர்ந்த 10 நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஒடிசாவில் தொழில் தொடங்கும் தமிழக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்க அம்மாநில அரசு முன்வந்திருப்பதே இதற்கு காரணம்.

மறக்க முடியாத தண்டனை

ராம்தாஸ்ப்பூர் ஜவுளிப்பூங்காவில் துணி ஆலைகளை அமைப்பதற்கான கட்டுமானச் செலவுகள் மற்றும் பொது வசதிகளுக்கான செலவுகளில் 60 சதவீதம் மானியம், புதிய எந்திரங்களுக்கான கொள்முதல் விலையில் 25 சதவீதம் மானியம், மூலதனத்திற்காக ரூ.1 கோடி வரை வட்டியில்லாக் கடன் போன்ற சலுகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒரு துணி ஆலையில் 200 தொழிலாளர்களுக்கும் மேல் பணி அமர்த்தப்பட்டால், அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை வழங்கவும் ஒடிசா மாநில அரசு முன்வந்திருக்கிறது.

ஆனால், தமிழக அரசோ மற்ற தொழில் நிறுவனங்களைப் போலவே துணி ஆலைகளையும் பணம் பறிக்கும் ஆதாரங்களாக பார்த்ததன் விளைவாகவே அவை திருப்பூரில் இருந்து வெளியேறி ஒடிசாவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. இதற்கெல்லாம் காரணமான பினாமி ஊழல்வாதிகளுக்கு மறக்க முடியாத தண்டனை வழங்கும் நாளுக்காக மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்