சென்னையில் பரபரப்பு தத்து எடுத்து வளர்த்த சிறுமியை கொன்றதாக வக்கீல் கைது
சென்னையில், தத்து எடுத்து வளர்த்த சிறுமியை கொலை செய்ததாக வக்கீல் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கழித்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
வக்கீல் ஜெரால்டுசென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 49). இவர் சென்னை எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பெயர் சங்கீதா. இவர் சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். வக்கீல் ஜெரால்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மிருதுளா (4) என்ற சிறுமியை மதுரையில் செயல்படும் காமராஜர் ஆதரவற்ற இல்லத்திலிருந்து சட்டப்படி தத்து எடுத்தார்.
தனது வீட்டில் சிறுமி மிருதுளாவை வளர்த்து வந்தார். சிறுமி மிருதுளா வாய் பேச முடியாதவர். பேசுவதற்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
காயத்துடன் சிகிச்சைதத்து எடுத்து ஒரு மாதத்தில் அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7–ந் தேதியன்று சென்னை நுங்கம்பாக்கம் தனியார் குழந்தைநல மருத்துவமனை ஒன்றில் சிறுமி மிருதுளா தலை மற்றும் அடிவயிற்றில் காயத்தோடு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி சிறுமி மிருதுளா பரிதாபமாக இறந்து போனாள். காயம்பட்டு இறந்ததால் சிறுமி மிருதுளாவின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அப்போது மர்மச்சாவு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
திடீர் கைதுசிறுமி மிருதுளா இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் நேற்று சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வக்கீல் ஜெரால்டை திடீரென்று கைது செய்தனர். சிறுமி மிருதுளாவை தலையணையால் முகத்தை அமுக்கி கொன்றதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. உயிருக்கு பேராடியபோது சிறுமியின் தலையிலும், அடிவயிற்றிலும் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும், தடய அறிவியல் நிபுணர்களின் அறிக்கையிலும் சிறுமி மிருதுளா கொலை செய்யப்பட்டது உறுதியானதால் வக்கீல் ஜெரால்டு மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி மிருதுளாவுக்கு பேச்சு வராது என்று டாக்டர்கள் கூறிவிட்டதால் அவரை வக்கீல் ஜெரால்டு கொன்றுவிட்டதாக போலீசார் தற்போது குற்றம் சாட்டி உள்ளனர். சிறுமி மிருதுளா கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே உறுதியான தகவல் தெரிந்த பிறகும் அப்போது சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் உண்மையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இப்போதைய இன்ஸ்பெக்டர் சகாதேவன் உண்மை நிலையை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து வக்கீல் ஜெரால்டு மீது கைது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
போராட்டம்வக்கீல் ஜெரால்டு கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நேற்று ஏராளமான வக்கீல்கள் கூடிநின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கழித்து போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக வக்கீல்கள் குற்றம் சுமத்தினார்கள்.
பிரேத பரிசோதனை மற்றும் தடய அறிவியல் அறிக்கையின் அடிப்படையில்தான் வக்கீல் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலை செய்யப்பட்ட சிறுமி அனாதை என்பதற்காக வழக்கும் அனாதையாகிவிடாது என்றும் போலீசார் கூறினார்கள்.
சிறையில் அடைப்புவக்கீல் ஜெரால்டு நேற்று பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி மிருதுளா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உயர் அதிகாரி மட்டத்தில் விசாரணை நடக்கிறது.