கோவையில் மழை பெய்தபோது மின்சாரம் தாக்கி அண்ணன்-தங்கை பரிதாப சாவு

கோவையில் மழை பெய்தபோது மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-06-07 21:24 GMT

கோவை,

கோவையில் நேற்று மதியம் 3 மணி அளவில் மழை பெய்தது. அப்போது கோவை உக்கடம், ஜி.எம்.நகர், மஜீத்காலனியில் சுலைமான் என்பவரது வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. அப்போது சுலைமான், அவருடைய மனைவி பாத்திமா ஆகியோர் வீட்டில் இல்லை.

இதனால் வீட்டில் இருந்த அவர்களின் மகன் சல்மான் (வயது 18), மகள் சாய்ராபானு (16) ஆகியோர் வீட்டுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரத்தில் பிடித்து வெளியே ஊற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது வீட்டு முன்புறம் இருந்த இரும்பு மின்கம்பத்தை சல்மான் தொட்டார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.

அண்ணன்-தங்கை சாவு

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சாய்ராபானு, சல்மானை காப்பாற்ற முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெரியகடைவீதி போலீசார் விரைந்துசென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முறைகேடாக மின் இணைப்பு

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மஜீத்காலனியை சேர்ந்த முஸ்தபா என்பவர் வேறு ஒருவரின் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கும், அங்குள்ள கேரம்போர்டு விளையாட்டு மன்றத்துக்கும் முறைகேடாக இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது மின்சார வயரை, இரும்பு கம்பத்தில் சுற்றி கட்டியுள்ளார். அந்த மின்சார வயர் அறுந்து இருந்துள்ளது.

மழையின்போது மின்சார வயரில் இருந்து இரும்பு கம்பத்துக்கு மின்சாரம் பாய்ந்து இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக முஸ்தபாவை (35) போலீசார் கைது செய்தனர்.

இறந்த இருவரின் உடல்களை பார்ப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். அவர்கள், மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்