காட்டுப்பள்ளியில் நடந்த விழாவில் கடலோர காவல் படையில் புதிய ரோந்து படகுகள் இணைப்பு
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் நடந்த விழாவில், இந்திய கடலோர காவல் படையில் புதிய ரோந்து படகுகள் இணைக்கப்பட்டது.
சென்னை,
இந்திய கடலோர காவல் படைக்கு தேவையான 36 ரோந்து படகுகளை தயாரிக்க கடந்த 2010–ம் ஆண்டு ‘எல்.ஆண்டு.டி’ கப்பல் கட்டும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி குஜராத் மாநிலம் சூரத்தை அடுத்த ஹசீரா துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் பிரிவில் இருந்து 24 ரோந்து படகுகள் தயாரிக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதம் உள்ள ரோந்து படகுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இதுதவிர 8 ரோந்து படகுகள் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் 2 ரோந்து படகுகள் இந்திய கடலோர காவல் படையிடம் இணைக்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தென்பிராந்திய கடலோர காவல் படை ஐ.ஜி. ராஜன்பர்க்கோத்ரா தலைமை தாங்கினார். விழாவில் ஆற்காடு இளவரசர் எச்.எச்.நவாப் முகமது அப்துல் அலி, அவருடைய மனைவி பேகம் சகீபா சையத் அப்துல் அலி ஆகியோர் கலந்து கொண்டு, படகுகளை கடலோர காவல் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தென்பிராந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கூறியதாவது:–
நவீன தொழில்நுட்பம்கடலோர ரோந்து பணி, கண்காணிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், கடலோர பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சி–433, சி–434 ரோந்து படகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த படகுகள் காரைக்கால், காக்கிநாடாவை மையமாக வைத்து செயல்படும்.
15 ஆண்டுகள் இந்த படகுகளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் 1 அதிகாரி, 2 துணை அதிகாரிகள் மற்றும் 12 கடலோர காவல்படை வீரர்கள் பணியில் இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.