உதவி பேராசிரியர் பணி தேர்வில் முறைகேடு: கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் பதில் அளிக்க வேண்டும்
கால்நடை பல்கலைக்கழகத்தில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் கணேசன். இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சென்னை,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 49 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2016–ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. உதவி பேராசிரியர்களை நியமிக்கும் போது நேர்முக தேர்வுக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், எழுத்து மற்றும் இதர தேர்வுகளுக்கு 85 சதவீத மதிப்பெண்ணும் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆனால், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிட நியமன தேர்வு நடைமுறையில் 35 சதவீத மதிப்பெண் தேர்வுக்குழுவின் தலைவரான துணைவேந்தரின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் உதவி பேராசிரியர் நியமனம் முறைகேடாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து முறைகேடாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் நான் கையெழுத்திட மறுத்துவிட்டேன். எனவே இந்த தேர்வு நடைமுறை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர். விசாரணையை 9–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.