அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதி; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்ட அறிவிப்பு

அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய பிறகு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

Update: 2017-06-05 22:13 GMT

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் பிளவு

தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் பொதுச் செயலாளராக இருந்த அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ஒரு அணிக்கு கட்சியின் புதிய பொதுச் செயலாளரான சசிகலாவும், மற்றொரு அணிக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தலைமை வகித்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்–அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொள்ள சசிகலா முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சசிகலா சரண் அடைந்தார். பின்னர், அங்குள்ள சிறையிலேயே அவர் அடைக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் அணி நிபந்தனை

சசிகலா சிறை செல்லும் முன்பு, அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை அறிவித்து சென்றார். அதன் பிறகு, டி.டி.வி.தினகரன் கட்சி நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கினார். சசிகலா சிறை சென்ற மறுநாள் (பிப்ரவரி 16–ந் தேதி) தமிழகத்தின் புதிய முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நேரத்தில், அ.தி.மு.க. 2 அணிகளையும் இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. 2 அணி தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழுக்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சில நிபந்தனைகளை விதித்தனர். அதில் ஒன்று, டி.டி.வி.தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஜாமீனில் வந்த டி.டி.வி.தினகரன்

அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக டி.டி.வி.தினகரன் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது டி.டி.வி.தினகரன் அணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில், பேட்டியளித்த சில அமைச்சர்கள், டி.டி.வி.தினகரனை கட்சியை விட்டு ஒதுக்குவதாக கூறினர். இதை டி.டி.வி.தினகரனும் ஏற்றுக்கொண்டு கட்சியை விட்டு ஒதுங்கப்போவதாக அறிவித்தார்.

இந்த நேரத்தில் தான், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்த அவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.

அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை திரும்பிய டி.டி.வி.தினகரன், மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதனால், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் கலக்கம் அடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி.தினகரன் சென்றார். அங்கு செல்லும் முன்பாக பேட்டியளித்த டி.டி.வி.தினகரன், ‘‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் அறிவுரையின்படி தனது எதிர்கால பயணம் இருக்கும்’’ என்று தெரிவித்தார். மேலும், ‘‘அமைச்சர்கள் ஏதோ பயத்தின் காரணமாக என்னை கட்சியை விட்டு ஒதுங்கியிருக்க சொன்னார்கள்’’ என்று தடாலடியாக கூறினார்.

இப்படி அமைச்சர்கள் மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில், சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறைக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் அங்கு வந்து ஆலோசனை நடத்தினார்கள்.

அமைச்சர்கள் ஆலோசனை நடத்துவதை கேள்விப்பட்டு, ஏனைய அமைச்சர்களுடன் ஒவ்வொருவராக வந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களை தவிர, ஏனைய 27 அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், அமைச்சர்கள் அனைவரும் ஜெயக்குமார் தலைமையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

அதன்பிறகு, வெளியே வந்த அமைச்சர்களில் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் கனவு

தமிழக சட்டசபை கூடுகிற சமயத்தில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்களையும் அழைத்து, அதன் அடிப்படையில் சட்டசபையில் ஜெயலலிதாவின் கனவு, லட்சியங்களை நிறைவேற்றுகிற வகையில் அவரவர் மானியத்தின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என்ற அறிவுரையை வழங்குகின்ற கூட்டம் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:–

மக்கள் பாராட்டு

கேள்வி:– இந்த கூட்டத்தில் எதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது?

பதில்:– ஏப்ரல் 17–ந் தேதியன்று, மின்சாரத்துறை அமைச்சரின் இல்லத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அனைவருமே ஒன்றுகூடி ஒருமித்த உணர்வோடு, ஒருமித்த கருத்தோடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய மாபெரும் இயக்கமான, 1½ கோடி தொண்டர்களோடு ஜெயலலிதா வழிநடத்திய அ.தி.மு.க.வை காக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவால் ஏற்பட்ட இந்த ஆட்சியை தொடர்ந்து 2020–21 ஆண்டு வரை நடத்திட வேண்டும், அதன்பின்னரும் ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்து மலர்ந்திட வேண்டும் என்ற அடிப்படையிலும், கட்சி–ஆட்சி நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்களை கட்சியில் இருந்து முழுமையாக விலக்கி வைத்தல் எனும் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஜெயலலிதா ஆட்சி மக்கள் பாராட்டும் வகையில் இன்று உள்ளது.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்து கட்சி பணியை மீண்டும் தொடருவேன் என்று கூறும்போது, அதுதொடர்பான விளக்கத்தை அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

ஏப்ரல் 17–ந் தேதியன்று எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில், அன்றைய தினம் இரவே, ‘நான் கட்சியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன், அம்மா ஆட்சி தொடர்வதற்கு எந்தவித இடையூறும் என்னால் வராது’ என்று டி.டி.வி.தினகரன் கூறினார். அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியோடு இருக்கவேண்டும்.

தொடர்பு இல்லை

ஏப்ரல் 17–ந் தேதியன்று என்ன முடிவு எடுத்தோமோ, அதில் நாங்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறோம். டி.டி.வி.தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்களை சார்ந்தும் நாங்கள் இல்லை. அவர்களின் பின்னணியிலும் இல்லை.

யாருடைய பின்னணியும் இல்லாமல் ஜெயலலிதா அரசை நாங்கள் வழிநடத்தி கொண்டிருக்கிறோம். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. டி.டி.வி.தினகரன் சார்ந்தவர்களின் தலையீடு அணு அளவும் இல்லாமல், ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறோம்.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையிலே ஜெயலலிதா அரசை வழிநடத்தி சென்றுகொண்டிருக்கும்போது, எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். கட்சி தொண்டர்களும் தெளிவாகவே இருக்கிறார்கள். டி.டி.வி.தினகரனை நிச்சயமாக யாரும் எந்த அளவிலும் சந்திக்க மாட்டார்கள். அந்த உறுதியோடு இருக்கிறோம்.

இலக்கு என்ன?

கேள்வி:– 10 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனை சந்திக்க சென்றிருக்கிறார்கள்?

பதில்:– இது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த கேள்வி. எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். அவர்களை சார்ந்து நாங்கள் இல்லை. முழுமையான அளவுக்கு அவர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில், தற்போது ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். எனவே இப்போது இருக்கின்ற பிரச்சினை ஜெயலலிதா ஆட்சி 5 ஆண்டுகளும் நடக்கவேண்டும், அதன்பின்னரும் தொடரவேண்டும் என்பது தான். அது தான் எங்களின் இலக்காக இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்