தாய்ப்பால் கொடுத்தபோது இறந்ததாக நாடகம்: இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
இரட்டை பெண் குழந்தைகள் தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் இறந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக அந்த குழந்தைகளை ஆண் குழந்தை ஆசையில் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்,
திவ்யா குழந்தைகளுடன் கண்ணங்குளத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் தங்கியிருந்தார். 2-ந் தேதி இரட்டை பெண் குழந்தைகளும் தாய்ப்பால் குடித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக குடும்பத்தினரிடம் திவ்யா கூறினார். இதனால் காற்றாடித்தட்டில் உள்ள அவர்களது வீட்டிலேயே குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டன.
கொன்றதை ஒப்புக்கொண்டார்
ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளும் எப்படி இறந்திருக்க முடியும்? என்ற சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்கும், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன. அதிகாரிகள் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்து நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டன.
குழந்தைகளின் தாய் திவ்யாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திவ்யா உண்மையை கூறினார். ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு இருந்த நிலையில், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் குழந்தைகளை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
பரபரப்பு வாக்குமூலம்
இதைத்தொடர்ந்து திவ்யாவை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
என் கணவர் கண்ணனின் 4 சகோதரர்களில் 3 பேருக்கு பெண் குழந்தைகளே உள்ளனர். ஒருவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் ஆண் வாரிசுகளே இல்லை என்று என் கணவரின் குடும்பத்தினர் வருத்தப்பட்டனர். நான் முதலில் கர்ப்பமடைந்தபோது ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் எனக்கும், என் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரின் உறவினர்களும் என்னிடம் வெறுப்புடனேயே பழகினார்கள். இந்த நிலையில் நான் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தேன். இதில் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.
மூச்சை திணறடித்து...
இம்முறையும் இரட்டை பெண் குழந்தைகளாக பிறந்தன. இது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்றாலும் அதனை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பேசினேன். என் கணவரும் என்னிடம் சரியாக பேசவில்லை. இதனால் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ்வாரோ, மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது.
இதனால் மனதை கல்லாக்கிக் கொண்டு, பச்சிளம் குழந்தைகள் என்று பாராமல் நானே தாய்ப்பால் ஊட்டும்போது மார்போடு இறுக்கமாக அணைத்து, மூச்சைத் திணறடித்து கொலை செய்தேன். அக்கம் பக்கத்தினர் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக தாய்ப்பால் ஊட்டியபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறி நாடகம் ஆடினேன்.
உடல்களை பிரேத பரிசோதனை செய்த சிறிது நேரத்தில் தாயிடம் நன்றாக விசாரியுங்கள் என்று டாக்டர் கூறினார். இதைக் கேட்ட நான் மிகவும் பதற்றம் அடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் திவ்யா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பதற்றத்தால் சிக்கினார்
ஆனாலும் இந்த கொலையில் திவ்யா மட்டும்தான் சம்பந்தப்பட்டு இருக்கிறாரா? அல்லது குடும்பத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறும்போது, “குழந்தைகளின் உடல்கள் பிரேதபரிசோதனை நடந்தபோதே திவ்யா பதற்றத்துடன் காணப்பட்டார். பிரேத பரிசோதனை முடிந்ததும் பயம் மற்றும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்த அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் பிரேதபரிசோதனை அறிக்கை வரும்முன்பே உண்மையை கண்டறிந்து, அவரையும் கைது செய்துள்ளோம்” என்றார்.