6 மணி நேரம் சைக்கிள் ஓட்டி பள்ளி மாணவர் அசத்தல் கின்னஸ் சாதனைக்கு முயற்சி

‘ரூபிக் கியூப்’ புதிரை விடுவித்தபடியே தொடர்ந்து 6 மணி நேரம் சைக்கிள் ஓட்டி பள்ளி மாணவர் சாதனை படைத்து உள்ளார்.

Update: 2017-06-04 21:30 GMT
சென்னை,

‘ரூபிக் கியூப்’ புதிரை விடுவித்தபடியே தொடர்ந்து 6 மணி நேரம் சைக்கிள் ஓட்டி பள்ளி மாணவர் சாதனை படைத்து உள்ளார். இந்த சாதனை குறித்து கின்னஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாதனை

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 12-ம் வகுப்பு படித்து முடித்தவர், பி.கே.ஆறுமுகம். இவர் ‘ரூபிக் கியூப்’ புதிர்களை விடுவிப்பதில் வல்லவரான இவர், வித்தியாசமான முறையில் இதில் சாதனை படைக்க விரும்பினார். எனவே சைக்கிள் ஓட்டியபடியே ‘ரூபிக் கியூப்’ புதிர்களை பலமுறை விடுவித்து சாதனை படைக்க எண்ணினார்.

இதற்கு முன்பு ஸ்ரீவத்ஸ் ராஜ்குமார் என்பவர் 7 மணி நேரம் 20 நிமிடங்கள், சைக்கிளை ஓட்டியவாறு 751 முறை ‘ரூபிக் கியூப்’ புதிரை விடுவித்து இருக்கிறார். 2016-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இச்சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்க ஆறுமுகம் பயிற்சி மேற்கொண்டார்.

முறியடிப்பு

அதன்படி புதிய சாதனை நிகழ்த்த, தான் படித்த பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் அவர் நேற்று ஆயத்தமானார். அவர் சாதனை நிகழ்த்துகிறாரா? என்பதை கண்காணிக்க 2 நடுவர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

முதல் 4 மணி நேரத்திலேயே சைக்கிள் ஓட்டியபடி 752 முறை ‘ரூபிக் கியூப்’ புதிரை விடுவித்து பழைய சாதனையை முறியடித்தார். தொடர்ந்து சைக்கிள் ஓட்டியபடி, காலை கீழே வைக்காமலேயே 6 மணி நேரம் 7 நிமிடங்கள் 44 வினாடிகளில், 1,010 முறை ‘ரூபிக் கியூப்’ புதிரை விடுவித்து புதிய சாதனையை படைத்தார்.

இந்த சாதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ கின்னஸ் உலக சாதனை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்