3-வது நாளாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரம்

தீ விபத்தில் நாசமடைந்த சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி 3-வது நாளாக நேற்று தீவிரமாக நடந்தது.

Update: 2017-06-04 21:30 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மாதம் 31-ந் தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமான 7 மாடி கட்டிடம் நெருப்பின் பிடியில் சிக்கியது. மறுநாள் அதிகாலையில் கட்டிடத்தின் உள்பகுதி அப்படியே சரிந்து விழுந்தது.

இதையடுத்து பல்துறை வல்லுனர்கள் நடத்திய ஆய்வு முடிவில் கட்டிடத்தின் உறுதித்தன்மை மோசமாக உள்ளதாக தெரியவந்தது. இதனால் கட்டிடத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2-ந் தேதி கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியது. நவீன முறையில் கட்டிட இடிபாடுகள் உள்புறத்திலேயே விழும் வகையில் இடிக்கப்பட்டு வருகிறது.

இடிப்பு பணி

இதற்காக கட்டிடத்தின் பின்புறம் உள்ள வாகன நிறுத்த வளாகத்தில் தற்காலிக மேடு அமைக்கப்பட்டு, ‘ஜா கட்டர்’ எந்திரங்கள் மூலம் கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது. இடிப்பு பணியின்போது தூசு அதிகளவில் வெளிப்படாமல் இருக்க தண்ணீரும் பீய்ச்சியடிக்கப்பட்டு வருகிறது. 3-வது நாளாக நேற்றும் கட்டிடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்தது.

நேற்றைய இடிப்பு பணியின்போது, கட்டிடத்தின் 4-வது தளத்தில் இருந்த துணிக்கழிவுகள் திடீரென்று தீ பற்றி எரியத்தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தண்ணீர் பீய்ச்சியடித்து தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீயின் கனல் துணிக்கழிவுகளால் தொடர்ந்து இருந்ததாலும், காற்றின் வேகத்தால் தீப்பிடித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

2 நாட்களில்...

பாதுகாப்பு கருதி தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டு உள்ளது. கட்டிட உறுதியின்மை, தூசு பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை கருதி தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உஸ்மான் சாலையில் பல கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்பான முறையில் கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருவதால், இன்னும் 2 நாட்களில் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்