மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்து மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் கருணாநிதி பிறந்தநாள் விழாவில் நிதிஷ்குமார் பேச்சு

தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்து, பீகாரை போல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் நிதிஷ்குமார் பேசினார்.

Update: 2017-06-04 00:00 GMT
சென்னை,

மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த அரசியல் அனுபவத்தை பெற்று இருக்கிறார் என்றும், தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்து, பீகாரை போல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் நிதிஷ்குமார் பேசினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் அவரின் 60-வது ஆண்டு கால சட்டமன்ற வைர விழா நடந்தது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசியதாவது:-

சரித்திர சாதனை

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்டவர் கருணாநிதி. சமூக நீதிக்காக பாடுபட்ட சிறந்த தலைவராக அவர் திகழ்கிறார். அவருக்காக எடுக்கப்பட்ட இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அவர் தன்னுடைய 14-வயதிலேயே சமூக பணிகளில் ஈடுபட்டவர். தமிழ் எழுத்தாளராக அறிமுகமாகி, பல வித காவியங்கள் மூலமாக மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து, மக்களை சமூக சிந்தனைக்கு அழைத்து சென்றார்.

கருணாநிதி 60 ஆண்டுகாலம் சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இது வரை யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஒரு முறை கூட தோற்காத தலைவராக அவர் இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இருக்காது. 50 ஆண்டுகாலம் தி.மு.க. என்ற மிகப்பெரிய இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.

இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். சமூக நல்லிணக்கத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த 94-வயதிலும் அவர் உருவாக்கிய புரட்சிகரமான கருத்துக்கள் மக்கள் மனதில் குடி கொண்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டி தலைவராக இருக்கிறார்.

வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் சிபாரிசுகளை செயல்படுத்த முயன்றபோது, சிலர் எதிர்த்தனர். அப்போது கருணாநிதி இந்த மண்டல் கமிஷன் சிபாரிசு மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்ல வாழ்க்கை வரும் என்று கூறி, வி.பி.சிங்குக்கு ஆதரவாக இருந்தார்.

மக்களின் முன்னேற்றத்திற் காக, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். குறிப்பாக பெண் க்ஷ்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக் கீடு அளித்தார். பெண்கள் சுய உதவிக்குழுவை அமைத்தார்.

முதல்-அமைச்சராக வருவார்

தி.மு.க. மிகவும் சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது. ஒரு விஷயத்தை இங்கே கூற விரும்புகிறேன். மது விலக்கை கொண்டு வருவதில் பீகார் அரசு வெற்றி பெற்று இருக்கிறது. அங்கு பூரணமாக மதுவிலக்கை அமல்படுத்தி இருக்கிறோம். நான் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை படித்தேன். அந்த வாக்குறுதியில் பூரண மதுவிலக்கை, பீகாரை போல தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கூறப்பட்டு இருந்தது. பீகாரில் மதுவிலக்கை கொண்டு வந்ததால் பல முன்னேற்றங்களை கொண்டு வந்து இருக்கிறோம்.

ஏழை மக்கள் மதுவுக்காக பணத்தை செலவழிப்பது குறைந்து விட்டது. சாலை விபத்து குறைந்து விட்டது. குற்றங்கள் குறைந்து விட்டது. இதை விட வேறு என்ன வேண்டும். மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுப்பது மட்டுமல்ல, சிறந்த வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணிப்பது தான் முக்கியம். மதுவை ஒழித்து விட்டதால் தான் எங்களால் இத்தகைய நிலையை அடைய முடிந்தது.

மு.க.ஸ்டாலின் மிகச்சிறந்த அரசியல் அனுபவத்தையும் பெற்று இருக்கிறார். அவர் இந்த மாநிலத்தின் முதல்- அமைச்சராக வருவார் என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது. இது நிச்சயமாக நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அவ்வாறு அவர் முதல்- அமைச்சராக வரும்போது, கருணாநிதியின் திட்டங்களை நிறைவேற்றி, பீகாரை போல தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

இந்த மேடையில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். கருணாநிதி மீது வைத்துள்ள பாசத்தின் காரணமாக ராகுல்காந்தி உள்பட தலைவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். அனைத்து கட்சி தலைவர்களும் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தி.மு.க. மேலும் வலுப்பெற்று தேசிய அளவில் மிகச்சிறந்த பங்கை ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசியதாவது:-

வரலாற்றில் அற்புதமான பண்புகளை கொண்ட சில தலைவர்களை அற்புதமாக தான் எதிர்கொள்கிறோம். அப்படிப்பட்ட அற்புதமான பண்புகளை கொண்ட தலைவர்களில் ஒருவர் தான் கருணாநிதி. கருணாநிதி தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் பன்முக ஆளுமை கொண்ட தலைவர். இந்திய நாடு இன்று பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. வேற்றுமைகளில் ஒற்றுமை என்று இருந்த காலம் ஒன்று. ஆனால் வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு பாராட்டுகிற தேவை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. கருணாநிதி இந்த மேடையில் இருந்திருப்பார் என்றால் கூட்டாட்சி நெறிமுறையை காப்பாற்றப்பட வேண்டும் என்று குரல் கொடுத்து இருப்பார்.

கருணாநிதி ஆரோக்கியமாக இருந்தால் என்ன செய்வாரோ? அதை தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்வார் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை மதவெறி அரசியலில் இருந்து விடுவிப்பதற்காக மு.க.ஸ்டாலின் களத்தில் எங்களோடு கைகோர்த்து நிற்பார் என்று நான் நம்புகிறேன்.

கருணாநிதி உடல்நலம் பெற்று அவருடைய பேனா மீண்டும் எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவருடைய பேனா மைத்துளியில் இருந்து வெளிவரும் வார்த்தை தமிழ் மக்களுக்கு வேண்டும். அவருடைய வாயின் துளிகள் தமிழருக்கு வேண்டும். அவர் நல்ல ஆரோக்கியம் பெற்று மீண்டும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காதர்மொய்தீன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் காதர்மொய்தீன் பேசும்போது, ‘கருணாநிதிக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முன்னதாக பாரத ரத்னா விருதை மத்திய அரசு உடனடியாக வழங்கி, இதுவரை தமிழகத்துக்கு செய்து வந்த துரோகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று நிதிஷ்குமார் கூறினார். இதை தான் நாங்களும் விரும்புகிறோம், தமிழக மக்களும் விரும்புகிறார்கள்’ என்றார். 

மேலும் செய்திகள்