ஜனாதிபதி தேர்தலில் மதசார்பற்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டால் இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி

ஜனாதிபதி தேர்தலில் மதசார்பற்ற வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளார்.

Update: 2017-06-03 21:45 GMT
சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. ஆகியோர் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது சுதாகர் ரெட்டி கூறியதாவது:-

தமிழகத்தின் அடையாளத்தை உலக அரங்கிற்கு உணர்த்திய கருணாநிதிக்கு பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைர விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ஜ.க.வின் 3 ஆண்டு கால ஆட்சியில் எந்தவொரு மக்கள் நலத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே மக்களுடைய வாழ்க்கை தரமும் எந்தவிதத்திலும் முன்னேற்றம் அடையவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தவறி விட்டார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்க மறுக்கிறது. இதில் ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

போராட்டம் வெடிக்கும்

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. தலித்துகளுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்பது வெட்கக் கேடானது. இதனால் தோல் தொழிற்சாலைகள் பாதிப்படைந்து உள்ளன. இந்த சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது மக்கள் நலனில் அக்கறை இல்லாததை காட்டுகிறது. மத்திய அரசை கண்டு தமிழக அரசு அச்சத்தில் இருப்பதையும் காட்டுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. இருப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் மதசார்பற்ற வேட்பாளர் நின்றால் ஆதரவு கொடுப்போம். இல்லை என்றால் இடதுசாரிகள் இணைந்து வேட்பாளரை நிறுத்துவோம்.இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.

அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. அழுத்தம்

டி.ராஜா எம்.பி., கூறும்போது, ‘பா.ஜ.க.வின் 3 ஆண்டு கால ஆட்சியில் பாராளுமன்றம் சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் சட்டம் மதிக்கப்படுவது இல்லை. பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக போராட மதசார்பற்ற ஜனநாயக இடதுசாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு சக்தியை உருவாக்கவேண்டும்.

தமிழகத்தில் நிலவும் அ.தி.மு.க. உட்கட்சி பூசலை சாதகமாக பயன்படுத்தி கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க பா.ஜ.க. நினைக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு வாக்குகள் வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வின் 2 அணிகளுக்கும் பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறது’ என்றார்.

மேலும் செய்திகள்