மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை சென்று மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன் என்று அதிமுக(அம்மா) துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Update: 2017-06-03 03:41 GMT
புதுடெல்லி,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந்தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களும், இந்த வழக்கில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரும் தனிக்கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, உரிய ஜாமீன் நடைமுறைகளுக்கு பிறகு நேற்று இரவு இருவரும் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். நேற்று டெல்லியிலேயே தங்கிய டிடிவி தினகரன் இன்று காலை சென்னை புறப்பட்டார். முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், சென்னை சென்று கட்சி பணிகளை தொடர்வேன் என்றார். 

டிடிவி தினகரன் மீண்டும் கூறியதாவது:- “எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என்னை நட்பு ரீதியில் சந்தித்தார்கள். சென்னை சென்று மீண்டும் கட்சி பணிகளை தொடர்வேன். என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் அறிவிக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. சிறையில் இருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. மத்திய அரசுக்கு பணிந்து தமிழக அரசு செயல்பட வாய்ப்பு இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லி போலீசாரால் டிடிவி  தினகரன் கைது செய்யப்படுவதற்கு முன்பு, கட்சிப்பணிகளில் இருந்து தான் ஒதுங்கிவிட்டதாக டிடிவி தினகரன் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

மேலும் செய்திகள்