இலங்கையில் இருந்து படகில் கடத்திய 13 கிலோ தங்கம் பறிமுதல் 3 பேர் கைது

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 13¾ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-06-01 21:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி செல்லப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, ராம நாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவரின் கைப்பையில் உருக்கிய நிலையில் 7.36 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை கைப்பற்றிய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட மேற்கண்ட தங்கத்தினை கடத்தல் ஏஜெண்டுகள் மேற்கண்ட வாலிபரின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடியே 25 லட்சம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் கடத்தல்

இந்நிலையில் இலங்கையில் இருந்து மீண்டும் படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபம் அருகே உள்ள குந்துகால் கடற்கரை பகுதியில் பதுங்கியிருந்து ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் படகில் இருந்து இறங்கி வந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் 6.4 கிலோ தங்கம் உருக்கிய நிலையில் திரவ வடிவில் இருந்தது தெரியவந்தது.

இந்த தங்கத்தினை இலங்கையில் இருந்து படகில் கொண்டு வந்து கொடுத்த கடத்தல் புள்ளிகளிடம் இருந்து இந்திய எல்லைப் பகுதியில் வாங்கி வந்ததாகவும், இதனை மற்றொரு நபர் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொண்டு வந்த தங்கம் சுத்தமான தங்கம் என்பது தரமதிப்பீட்டாளர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

பிடிபட்ட வாலிபர்கள் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் மதுரையில் மேலும் விசாரணை நடத்தி முடித்த பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும், கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 85 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட இருவேறு சோதனைகளில் ரூ.4 கோடியே 10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. 

மேலும் செய்திகள்