‘ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எங்கள் பக்கம் வர முயற்சி செய்கிறார்கள்’; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள் எங்கள் பக்கம் வர முயற்சி செய்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2017-05-09 20:35 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள அண்ணா நீச்சல் குளத்தில் உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

வந்தால் நல்லது

கேள்வி:– இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை எந்த நிலையில் இருக்கிறது?

பதில்:– ஏற்கனவே பலமுறை இதுகுறித்து சொல்லி இருக்கிறேன். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய அந்த மனப்பக்குவத்துடன் தான் கட்சியிலும், ஆட்சியிலும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற அடிப்படையிலும், யாரையும் இழக்கக்கூடாது என்ற அடிப்படையிலும் பேச்சுவார்த்தைக்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் (ஓ.பன்னீர்செல்வம் அணி) வரலாம். நாங்கள் பேச தயாராக இருக்கிறோம். வந்தால் அவர்களுக்கு நல்லது. 2021–ம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சி தொடரும். அதன்பின்னர் மக்களை சந்திப்போம். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். பேச்சுவார்த்தையை பொறுத்தவரை எங்கள் கதவு அடைக்கப்படவில்லை. திறந்த மனதோடு இருக்கிறோம்.

விரைவில் நடக்க இருக்கிறது

கேள்வி:– தமிழகத்தில் தொடர்ந்து சசிகலா ஆட்சி தான் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்:– இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எள் அளவும் இதில் உண்மை இல்லை. ஜெயலலிதா ஆட்சி தான் நடைபெறுகிறது. ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ? அதை நாங்கள் செய்து வருகிறோம். சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். ஜெயலலிதா எப்படி ஆட்சியை வழிநடத்தினாரோ? அதே வழியில் தான் இப்போது ஆட்சி நடந்து வருகிறது.

கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ., தங்களுக்கு மேலும் 35 எம்.எல்.ஏ.க்கள், 12 அமைச்சர்கள் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறாரே?

பதில்:– அவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது ‘ஓட்டை படகை உப்பு வைத்து அடைத்தார்களாம்’ என்ற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் 98 சதவீதம் நாங்கள் ஒற்றுமையோடு இருக்கிறோம். அவர்கள் பக்கம் இருப்பவர்களை திருப்திப்படுத்துவதற்காக செம்மலை அப்படி கூறி இருக்கிறார். அவர்கள்(ஓ.பன்னீர்செல்வம் அணி) பக்கம் இருப்பவர்களில் பலர் எங்கள் பக்கம் வர முயற்சி எடுக்கிறார்கள். அதுவும் விரைவில் நடக்க இருக்கிறது. அதை தடுக்க இப்படி அவர்கள் சொல்லலாம்.

தவறான கருத்து

கேள்வி:– ரூ.300 கோடி அளவுக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வந்துள்ளதே?

பதில்:– அது முற்றிலும் தவறான கருத்து. சிலரால் திட்டமிட்டப்படி பரப்பப்படும் வதந்தி. அதுபோல் வருமான வரித்துறை கடிதம் உங்களுக்கு கிடைத்தால் அதை எங்களிடம் சொல்லுங்கள்.  இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும் செய்திகள்