குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம்

குதிரையில் அமர்ந்திருக்கும் வீரர் உருவத்துடன் ‘அதியமான்’ பெயர் பொறித்த நாணயம் பற்றிய ஆய்வு தகவல்களை தென்னிந்திய நாணயவியல் கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார்.

Update: 2017-04-15 22:15 GMT

சென்னை,

இதுகுறித்து தினமலர் ஆசிரியரும், தென்னிந்திய நாணயவியல் கழக தலைவருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அதியமான் இனியவன்

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க கால குறுநில மன்னன், அதியமானின் ஊர் தகடூர். இப்போது, அவ்வூரின் பெயர் தர்மபுரி. அதியமான் குறித்து, பல சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ளனர். அவ்வையாருக்கு, அதியமான் இனியவன். அதியமான், மழவர் இனத்தைச் சேர்ந்தவன். ‘குதிரைகளைக் கொண்ட மழவர், குறும்படை மழவர், கருங்கண் மழவர், போர்திறன் கொண்ட மழவர்’ என சங்க இலக்கிய பாடல்கள் மூலம் அறிகிறோம்.

அதியமானின் முன்னோர், முற்றிலும் நீரால் சூழப்பட்ட பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. தற்போது, பாகிஸ்தானில் ஓடும் ஜீலம், சினாப், ரபி ஆகிய நதிகளின் இடைப்பட்ட மிக வளமான பகுதியை, ‘மாலவாஸ்’ என்ற பழங்குடியினர், தொன்மைக் காலத்தில் ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்கள், மிகுந்த போர் குணம் கொண்டவர்கள்.

மலையமான் நாணயங்கள்

கிரேக்க பேரரசன் அலெக்சாண்டர் படையெடுத்தபோது, இந்த பழங்குடியினர், போரில் தோல்வியுற்று, தங்கள் நாட்டை விட்டு, ராஜஸ்தான் வழியாக மத்திய இந்தியாவிற்கும், பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்ததாக கருதப்படுகிறது. ‘அவர்களுக்கும், அதியமானின் முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்’ என சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால், அதை நிரூபிக்க, தகுந்த ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை. சங்க கால சேர, சோழ, பாண்டியர், மலையமான் நாணயங்கள் கடந்த 30 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 2 அதியமான் நாணயங்களை வெளியிட்டு உள்ளேன். இப்போது ஆய்விற்குள்ளாகி உள்ள நாணயம், கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் நடந்த தென்னிந்திய நாணயவியல் மாநாட்டில் கலந்து கொண்ட தர்மபுரியைச் சேர்ந்த நாணயம் சேகரிப்பவர் ஒருவரிடம் இருந்து வாங்கியது. நாணயம் நீண்ட காலம் நீரில் கிடந்ததால், மாசடைந்து, உருத்தெரியாமல் இருந்தது. அதை, சில நாட்கள் மிக கவனமாக சுத்தம் செய்த பின், அதன் சின்னங்கள் தெரியத் தொடங்கின.

கிரேக்க வீரர்கள் தொப்பி

அந்த நாணயத்தை பற்றிய விளக்கத்தை, இங்கே கொடுத்துள்ளேன். தேய்ந்த நிலையில் இருப்பதால், பல கோணங்களில் புகைப்படங்களை ஆய்வு செய்து உள்ளேன்.

முன்புறம்: இடப்பக்கம், அழகிய குதிரை ஒன்று நிற்கிறது. குதிரை மீது ஒரு வீரன் அமர்ந்து, அதைக் கட்டுப்படுத்தும் கயிற்றை பிடித்தபடி இருக்கிறான். அவன் அணிந்திருக்கும் தொப்பி, கிரேக்க வீரர்கள் அணியும் தொப்பிபோல் உள்ளது.

நாணயத்தின் வலப்பக்கத்தில் உள்ள விளிம்பில், மேலிருந்து கீழ் நோக்கி, ‘தமிழ்–பிராமி’ எழுத்து முறையில் ஆறு எழுத்துகளும், எழுத்துகளின் நடுவில் ஒரு மங்கலச்சின்னமும் இருப்பதை காணலாம். அந்த எழுத்துக்களைச் சேர்த்து, ‘அதியமான்ஸ’ என்று படிக்கலாம். எழுத்துகளையும், சின்னத்தையும் இங்கே கொடுத்து உள்ளேன்.

புலிச்சின்னம்

‘தி’ என்ற எழுத்திற்கும், ‘ய’ என்ற எழுத்திற்கும் இடையில், ‘திருவஸ்தம்’ என்ற மங்கலச்சின்னம் உள்ளது. இச்சின்னம், மிகத் தொன்மையான வெள்ளி முத்திரை நாணயங்களிலும், சங்க கால மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் காணமுடியும்.

பின்புறம்: நின்ற நிலையில் ஒரு புலிச்சின்னம், வலதுபக்கம் நோக்கி நிற்கிறது. புலியின் முதுகிற்கு மேல், ‘பிராமி’ எழுத்து முறையில், ‘ம’ என்ற எழுத்து தெரிகிறது. நாணயத்தின் வலது விளிம்பில், மேலிருந்து கீழ்நோக்கி, ‘அதியமான்ஸ’ என பொறிக்கப்பட்டுள்ளது.

காலம்: கி.மு. 3–ம் நூற்றாண்டாக கொள்வதில் தவறில்லை. தமிழனின் தொன்மை வரலாற்றுக்கு, இந்த நாணயமும் ஒரு சான்றாக விளங்கும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்