ஆவடி அருகே ‘உழவே தலை’ விவசாய மாநாட்டை நிபந்தனைகளுடன் நடத்த ஐகோர்ட்டு அனுமதி

ஆவடி அருகே ‘உழவே தலை’ என்ற விவசாய மாநாட்டை நிபந்தனைகளுடன் நடத்துவதற்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2017-04-03 21:21 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கத்தின் நிர்வாகி எம்.சந்திரமோகன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘கடுமையான வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வேதனை நகரவாசிகளுக்கு தெரியாததால், கிராமப்புற விவசாயிகளையும், விவசாயத்தில் நவீன யுக்திகளை கையாளும் நகர்ப்புற வல்லுனர்களையும் ஒருங்கிணைக்கும்விதமாக ‘உழவே தலை’ என்ற தலைப்பில் விவசாய மாநாட்டை சென்னை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 31–ந்தேதி முதல் நடத்த முடிவு செய்தேன். மாநாட்டில் கலந்துகொள்ள வெளியூரில் இருந்து விவசாயிகள் சென்னை வந்துள்ளநிலையில், மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே, மாநாட்டை நடத்த அனுமதி வழங்கும்படி போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகளை போலீசார் மிரட்டியதால், மாநாட்டை அங்கு நடத்த முடியாது. எனவே, ஆவடி அடுத்துள்ள பாண்டீஸ்வரம் கிராமத்தில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வி.சுரேஷ் கோரிக்கை விடுத்தார்.

நிபந்தனைகளுடன் அனுமதி

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாண்டீஸ்வரம் கிராமத்தில் விவசாய மாநாட்டை உரிய நிபந்தனையுடன் நடத்த அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என்று போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் மாநாடு நடத்த 23 நிபந்தனைகளையும் போலீசார் விதித்திருந்தனர்.

இதையடுத்து நீதிபதி ஆர்.மகாதேவன், ‘பாண்டீஸ்வரம் கிராமத்தில் புதன்கிழமை (நாளை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ‘உழவே தலை’ என்ற விவசாய மாநாட்டை போலீசார் விதித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி மனுதாரர் நடத்திக்கொள்ளலாம். இந்த நிபந்தனைகளை மீறும்போது, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது, இரவு 10 மணி வரை மாநாடு நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, ‘போலீசார் ஒன்றும் கெட்டவர்கள் இல்லை. நல்ல வி‌ஷயத்துக்காக நடைபெறும் இதுபோன்ற மாநாட்டுக்கு தேவையில்லாமல் தொந்தரவு செய்யமாட்டார்கள்’ என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்