பேச்சுவார்த்தை திருப்தி அளித்தாலும் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் நீடிக்கிறது

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளித்தாலும், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

Update: 2017-04-03 21:15 GMT
நாமக்கல்,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையே தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. 3½ மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் தன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை திருப்தி

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

தமிழக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க உறுதி அளித்துள்ளார். இதேபோல் பழைய வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாகவும் நல்ல முடிவு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த பேச்சுவார்த்தை எங்களுக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது.

இருப்பினும் வாகனங்களுக்கான இன்சூரன்சு தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐதராபாத்தில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

போராட்டம் தொடரும்

இந்த வேலைநிறுத்த போராட்டம் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எனவே நாங்கள் தன்னிச்சையாக தமிழகத்தில் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ்பெற முடியாது.

தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தற்போது அவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடருவதாக அறிவித்துள்ளனர். எனவே தமிழகத்திலும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கியாஸ் டேங்கர் லாரிகள்

இதற்கிடையே நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு நேற்று ஒருநாள் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

இதனால் நேற்று தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலத்தில் சுமார் 3,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக நாமக்கல் நகரில் ஆங்காங்கே சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை காணமுடிந்தது. இருப்பினும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வழக்கம்போல் ஓடும் என தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் கூறினார்.

மேலும் செய்திகள்