தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ரெயில்–சாலை மறியல் போராட்டம்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ரெயில்–சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-04-03 21:45 GMT

சென்னை,

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.

விவசாயிகள் போராட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

21–வது நாளாக நேற்று விவசாயிகள் பாதி மீசையை எடுத்து போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. அம்மா கட்சி (சசிகலா அணி), அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா கட்சி (ஓ.பன்னீர்செல்வம் அணி), தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

ஆர்ப்பாட்டம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோயம்பேடு மார்க்கெட் காய்–கனி–மலர் வியாபாரிகள் நலச்சங்கம், கோயம்பேடு மார்க்கெட் அனைத்து பகுதி தக்காளி வியாபாரிகள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோயம்பேடு மார்க்கெட் காய்–கனி–மலர் மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்க தலைவர் பழக்கடை ஜெயராமன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

திருமாவளவன் கைது

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட தொல்.திருமாவளவன், பி.கே.தெய்வசிகாமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என 100–க்கும் மேற்பட்டோரை கைது செய்து அதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ரெயில் மறியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பறக்கும் வழித்தடத்தில், வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறிது நேரம் ரெயில் நிறுத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 25–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ‘வால்டாக்ஸ்’ சாலையில் உள்ள அண்ணா பிள்ளை சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அமைதி போராட்டம்

சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அமைப்பான ‘புது ஜனநாயக தொழிலாளர் முன்னணி’ தமிழக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் அந்த ஊழியர்கள் நேற்று மாலை தங்கள் நிறுவனங்களில் இருந்து வெளியே வந்து ஒரு இடத்தில் கூடி ஒரு மணி நேரம் அமைதி போராட்டம் நடத்தினர்.

பாதிப்பு இல்லை

பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தெரிவித்திருந்தது. ஆனால் சென்னையில் பல்வேறு இடங்களில் கடைகள் திறந்திருந்தன. சில பகுதிகளில், ஒரு சில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன.

பஸ், ஆட்டோ, ரெயில் சேவைகள் வழக்கம்போல் இயங்கின. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிக்கடை, பழக்கடை, பூக்கடை ஆகியவை திறக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைகளை மட்டுமே வியாபாரிகள் அடைத்தனர். வேலைநிறுத்த போராட்டத்தால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

போராட்டம் வெற்றி பெறவில்லை

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி–டெல்டா மாவட்டங்களில் கடைகள் பெரும்பான்மையாக அடைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு சில இடங்களிலேயே கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவாக கடை அடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை. குறுகிய கால அவகாசம் இருந்ததே இதற்கு காரணம். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் நிறைவேற்றி கொடுக்க வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்