காந்திய வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் புதுடெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயங்கள் அடிப்படையில் இந்த ஆதரவினை அ.தி.மு.க. (அம்மா) அளிக்கிறது. என தினகரன் கூறி உள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதம் 14-ஆம் தேதி தொடங்கி புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்றுவரும் விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழகத்தில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு அ.தி.மு.க. (அம்மா) சார்பில் உளப்பூர்வமான, தார்மீக ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் புதுடெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயங்கள் அடிப்படையில் இந்த ஆதரவினை அ.தி.மு.க. (அம்மா) அளிக்கிறது.
கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தமிழக அரசின் சார்பிலும், கழகத்தின் சார்பிலும் மக்களவை துணை சபாநாயகர், அமைச்சர்கள் பலர், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தனர்.
விவசாயிகளை அழைத் துக் கொண்டு நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசினர். ஆனால் விவசாயிகளின் அடிப்படை கோரிக்கைகளில் சிலவற்றுக்கேனும் ஏற்கத்தக்க, மறுமொழியை மத்திய அரசு அளிக்கவில்லை.
இயற்கைப் பேரிடர்களையும், பருவ நிலை மாற்றங்களினாலும், நீதிமன்ற ஆணைகளின்படி நடந்து கொள்ள மறுக்கும் சில மாநிலங்களின் குறுகிய சிந்தனைகளாலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டுவரும் இன்னல்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனில் அதற்கு தேசிய அளவிலான உறுதியான செயல் திட்டம் தான் ஒரே தீர்வு.
அத்தகைய தீர்வை வேண்டி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கும், அதனை ஆதரித்து அமைதி வழியில் நடைபெறும் அறப்போரட்டங்களுக்கும் அ.தி.மு.க. (அம்மா) எப்பொழுதும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.