சென்னை தண்டையார்பேட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை

பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலால் தண்டையார்பேட்டையில் உள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2017-04-02 20:22 GMT
ராயபுரம்,

சென்னை தண்டையார்பேட்டை, தண்டையார்நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் டி.ராமச்சந்திரன்(வயது 45). அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், எம்.எச்.யு. காலனி மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். மேலும் அ.தி.மு.க.(அம்மா) கட்சியின் உறுப்பினர் ஆவார்.

டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான இவருக்கு, தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் பூத் கமிட்டி பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

வருமான வரி அதிகாரிகள் சோதனை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர், துப்பாக்கி ஏந்திய 5 போலீசாருடன் தண்டையார் நகரில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க அவருடைய வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஓட்டுக்கு பணம் வழங்கும் பணியில் ஈடுபடுவதற்காக வெளியூர் ஆட்கள் அவரது வீட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வந்து உள்ளதாக கூறி அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக ராமச்சந்திரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிரமாக விசாரணை நடத்தினர்.

‘சீல்’ வைக்க முயற்சி

அப்போது அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அந்த அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதன் சாவி இல்லாததால் அந்த அறையை ‘சீல்’ வைக்க முயன்றனர். இதற்கு ராமச்சந்திரனும், அக்கம் பக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு சாவி கொண்டு வரப்பட்டு அந்த அறையை திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், பணம் பதுக்கப்பட்டது தொடர்பாக எந்த ஒரு தடயமோ, ஆதாரமோ சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சோதனையில் எதுவும் சிக்கியதா? என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

வதந்தி பரப்புகின்றனர்

இதுகுறித்து ராமச்சந்திரன் கூறும்போது, “நான் அ.தி.மு.க.(அம்மா) கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக வளர்ந்து வருகிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும், தேர்தலில் எங்களுடைய வெற்றி வேட்பாளரை தோற்கடிப்பதற்காகவும் எதிரணி மற்றும் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற வதந்திகளை பரப்பி விடுகின்றனர்” என்றார்.

நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்