நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஊழியர்களுக்கு மாற்றுப்பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும்

நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படுவதால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மாற்றுப்பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2017-04-02 19:42 GMT

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தி.மு.க. எடுத்த முடிவு

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பெரிதும் வரவேற்கிறேன். உச்சநீதிமன்றம் 5.12.2016 மற்றும் 31.3.2017 அன்று அளித்த தீர்ப்புகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு உடனடியாக முழுமனதுடன் நிறைவேற்ற முன் வருவதுதான் மாநில நலனுக்கும், மக்கள் நலனுக்கும் நன்மைபயக்க கூடியது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் பொதுநலன் கருதி பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கையை ஏற்று 1,300 மதுக்கூடங்கள் (பார்கள்) மற்றும் 128 சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அதே போல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் 22.12.2008 அன்று முதல்–அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து முறையிட்டதைத் தொடர்ந்து 1.1.2009 முதல் புதிய மதுக்கடைகள் எதையும் திறப்பதில்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவினை அறிவித்தது தி.மு.க. அரசு என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கண்துடைப்பு

அது மட்டுமின்றி, காலை 10 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இருந்த மதுக்கடை விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என்று ஒரு மணி நேரம் விற்பனையை குறைத்து ஆணையிட்டதும் தி.மு.க. ஆட்சிதான்.

மதுக்கடைகளை மூடுவதற்கும், புதிய மதுக்கடைகள் திறக்க மாட்டோம் என்றும் முதற்கட்டமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த தி.மு.க. நடவடிக்கை எடுத்தது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று மக்கள் மன்றத்தில் தேர்தல் வாக்குறுதியளித்து சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று அரை மனதோடு வாக்குறுதி அளித்த அ.தி.மு.க. அரசு இப்போது பெயரளவிற்கு வருமானம் இல்லாத மதுக்கடைகளை மட்டும் அதுவும் ஒரு சில கடைகளை மட்டும் மூடி கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி அனைவரையும் ஏமாற்றிட எத்தனித்துக் கொண்டிருப்பதை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உரிய பணியிடம்

அதேபோல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரையே வைத்து வாதாடியதும் இதே அ.தி.மு.க. அரசு தான் என்பதையும் மக்கள் இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சாலை விபத்துகள், சட்டம் ஒழுங்கு, தாய்மார்களின் நலன் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும், அப்படி கடைகள் மூடப்படுவதால் அங்கு உள்ள பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு உரிய பணி வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

பாதுகாப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நோக்கத்தை சீர்குலைத்திடும் எண்ணத்தில் மூடிய கடைகளுக்குப் பதிலாக பக்கத்திலோ அல்லது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள 500 மீட்டர் தூரத்திற்குள்ளோ மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சில இடங்களில் இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின்னர் பொதுமக்களின் குறிப்பாகத் தாய்மார்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டதென்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் தற்போது பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்குத் தவறாமல் மாற்றுப்பணி வழங்குவதையும், பணித்தொடர்ச்சியை பாதுகாப்பதையும் அரசு உடனடியாக செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்