ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்வோம்
ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்வோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.நேற்று காலை ஆர்.கே.நகர் தொகுதி 38–வது வட்டத்துக்குட்பட்ட நேதாஜிநகர், சாஸ்திரி நகர், கருணாநிதி நகர், வினோபா நகர், பட்டேல்நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது சீமான் பேசியதாவது:–
மாற்று ஏற்பாடு செய்வோம்ஆர்.கே.நகர் தொகுதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு தான் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. அப்படியே குடிநீர் வந்தாலும், அதனுடன் கழிவுநீர் கலந்து வருகிறது. கொடுங்கையூர் குப்பை மேட்டில் மக்காத குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.
ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். கடந்த முறை அவர்கள் இதே தொகுதியில் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? ஏமாற்று வேலையை தான் செய்கிறார்கள். நாங்கள் வெற்றி பெற்றதும், இந்த ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிச்சயம் மாற்று ஏற்பாடு செய்வோம்.
மழைநீர் வடிகால் குழாய்களை அமைத்து சாக்கடை நீர் தேங்குவதை தடுப்போம். கழிவுநீர் மேலாண்மையை கையாண்டு சுகாதாரம் மிக்க தொகுதியாக மாற்றுவோம். நிலத்தடி நீர்வளத்தை காப்போம். காசிமேடு மீனவர்களுக்கு என நிரந்தர மீன் விற்பனை அங்காடியும், நவீன மீன் குளிர்பதன கிடங்கும் கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.