ஜெயலலிதா மரணத்துக்கு நீதிகேட்ட தேனி போலீஸ்காரருக்கு கட்டாய பணி ஓய்வு

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த தேனி போலீஸ்காரருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2017-03-31 21:30 GMT
தேனி,

இதுகுறித்த விவரங்கள் வருமாறு:-

தேனி மாவட்டம், குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்தார். பல்வேறு வீர சாகசங்கள் செய்ததற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இவருக்கு விருது வழங்கியுள்ளார். ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போது, சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன்பு வேல்முருகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஜெயலலிதா விடுதலையான பிறகு தேனியில் போலீஸ் சீருடை அணிந்து மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, அவர் பூரண குணமடைய வேண்டும் என்று சென்னை வடபழனி முருகன் கோவிலில், வேல்முருகன் அலகு குத்தி வழிபாடு நடத்தினார். இந்த நிலையில் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து போலீஸ் வேலையில் இருந்து தான் விருப்ப ஓய்வு பெறுவதாக கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேல்முருகன் மனு கொடுத்தார். அவருடைய மனு மீது துறை வாரியான விசாரணை நடந்து கொண்டு இருந்த நிலையில், சசிகலா தமிழகத்தின் முதல்-அமைச்சராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார். இதனால், அவர் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

கட்டாய பணி ஓய்வு

பின்னர், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் ஜான்பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்து, போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து லோயர்கேம்ப்பில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி வரை தொடர் ஓட்டம் செல்ல முயன்ற வேல்முருகனை போலீசார் தடுத்து நிறுத்தினர். இவ்வாறு தேனி மாவட்டத்தில் பல்வேறு பரபரப்புகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்த வேல்முருகனுக்கு போலீஸ் துறையில் இருந்து நேற்று கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்ட போது, ‘போலீஸ் பணியில் இருந்து கொண்டு போலீஸ் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், விதிமுறைகளை மீறியும் நடந்து கொண்டதால் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

இதுகுறித்து வேல்முருகனிடம் கேட்டபோது, ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்காக பணியில் இருந்த போது நடந்த சம்பவங்களின் போது என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தனிப்பட்ட ஒரு குடும்பத்தை எதிர்த்ததால் எனக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. நானே விருப்ப ஓய்வு மனு கொடுத்தபோது அதை ஏற்று விருப்ப ஓய்வு தானே கொடுக்க வேண்டும். கட்டாய பணி ஓய்வு கொடுத்து இருப்பது ஏற்கமுடியாதது. இந்த கட்டாய ஓய்வு உத்தரவுடன் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சென்னையில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று எனது அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிப்பேன்’ என்றார். 

மேலும் செய்திகள்