லாரிகள் வேலைநிறுத்தம் தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு சம்மேளன தலைவர் குமாரசாமி பேட்டி

லாரிகள் வேலைநிறுத்தம் 2-வது நாளாக நீடித்ததால் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.;

Update: 2017-03-31 22:00 GMT
நாமக்கல்,

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும். பழைய வாகனங்களுக்கு வேககட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

2-வது நாளாக நீடிப்பு

இதனால் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சரக்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளன. வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் எங்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால் வேலைநிறுத்த போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறோம். மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தவிர சுமார் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தில் மட்டும் நிறுத்தப்பட்டு உள்ளன.

ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு

இதனால் லாரி தொழிலை நம்பி உள்ள டிரைவர், கிளனர் உள்பட சுமார் 15 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி வீதம் சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்மாநில அளவில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைய தொடங்கி உள்ளது. இதனால் அவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மணல் லாரிகள்

இதற்கிடையே, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஒருநாள் மட்டும் ஆதரவு தெரிவித்து இருந்தது. இதனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. நேற்று சம்மேளனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் லாரிகள் இயங்கியதாக சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கூறினார்.

அதேசமயம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம், நாமக்கல் மாவட்ட அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மணல்லாரி கூட்டமைப்பு ஆகியவை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்