கடன் கொடுக்கவும், வாங்கவும் காவல் துறையினருக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

காவல் துறையினர் கடன் கொடுக்கவும், வாங்கவும் தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-03-18 20:47 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் நரசிம்மன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு சார்பு நிலை காவல்துறை அதிகாரிகள் நடத்தை விதிகளின்படி, அரசின் முன் அனுமதியின்றி காவல்துறையினர் கடன் வாங்கவும், கொடுக்கவும் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக கட்டப் பஞ்சாயத்துகளில் காவல் துறையினர் ஈடுபடுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

தள்ளுபடி

இந்த மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். இதுதொடர்பாக நடந்த சம்பவம் எதையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்டாமல், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்