புதிய நாணயம் கண்டுபிடிப்பு: தமிழகத்தை ‘களப்பிரர்கள்’ நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை

மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது.

Update: 2017-03-08 22:00 GMT
சென்னை, 

களப்பிரர்கள் கால புதிய நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்யவில்லை என்பதை அறிய முடிகிறது என்று தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இது குறித்து தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழக தலைவரும், தினமலர் செய்தி ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

களப்பிரர் என்ற இனக்குழு

சங்க கால இறுதியில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசுகளை ‘களப்பிரர்’ என்ற பெயர் கொண்ட ஒரு இனக்குழு படையெடுத்து, மூவேந்தர்கள் ஆண்ட தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர். அவர்கள் ஆண்ட காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று எழுதி உள்ளனர்.

அந்த இனக்குழுவினர் எங்கு இருந்து வந்தனர், அவர்களின் மதம், மொழி இவை எதையும் சரியாக அறிய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களை பற்றிய கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களோ கிடைக்கவில்லை. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த வேள்விக்குடி ‘செப்பேட்டில்’ களப்பிரர்களை பற்றிய செய்தி உள்ளது. ஜடாவர்மன் பராந்தக பாண்டிய மன்னரால் அது வெளியிடப்பட்டது.

‘களப்பிரர் நாணயங்கள்’ என எல். ராமையா 1973-ம் ஆண்டு ஒரு கட்டுரை வெளியிட்டார். 1986-ம் ஆண்டு களப்பிரர் நாணயம் பற்றிய படத்துடன் கூடிய கட்டுரை ஒன்றை நான் வெளியிட்டேன். வரலாற்று ஆசிரியர்கள் நாணயத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக இல்லை என்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

வித்தியாசமான நாணயம்

அந்த கட்டுரை வெளியாகி 30 வருடங்களுக்கு பின் இங்கு வெளியிடப்பட்டிருக்கும் நாணயம், எனக்கு சற்று எதிர்பார்க்காத சூழலில் கிடைத்தது. கடந்த மாதம் எனது பல்லவர் நாணயங்களின் தொகுப்பை சுத்தம் செய்தபோது இதுவரை நான் கண்டிராத வித்தியாசமான நாணயம் இருப்பதை கண்டேன். அந்த நாணயத்தை வைத்திருந்த சிறிய காகித கூட்டின் மேல் கரூர் அருகே உள்ள அமராவதி ஆற்றில் 1986-ம் ஆண்டு கிடைத்ததாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

அந்த நாணயத்தை பற்றிய குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளேன். நாணயம் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இந்த நாணயம் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. எடை 3.20 கிராம். இதன் குறுக்களவு 1.7 சென்டி மீட்டர்.

நாணயத்தின் முன்புறம்

நாணயத்தின் முன்புறத்தில் யானை ஒன்று வலப்பக்கம் நோக்கி உள்ளது. யானையின் முன்பு 3 மரத்தூண்களை கொண்ட ஒரு இலச்சினை இருக்கிறது. கிளைகளுடைய ஒரு மரச்சின்னம் யானையின் பின்னே இருக்கிறது. யானையின் மேல் பகுதியின் இடமிருந்து வலப்பக்கமாக 4 பிராமி எழுத்துக்களை பார்க்க முடிகிறது. அதை ஆங்கிலத்தில் ga-l-a-p-a-ra என்று படித்துள்ளேன். தமிழ் எழுத்தில் ga என்ற எழுத்து வடிவம் இல்லாததால் ga லபர என்று எழுதவேண்டி உள்ளது. ga என்ற எழுத்து ஆரம்பத்திலும் அதை அடுத்து ‘ல’ எழுத்தும் அதைதொடர்ந்து ‘ப’ எழுத்தும், அதன் தனியாக வலப்பக்கத்தில் ‘ர’ என்ற எழுத்து தனியாக மேல் பகுதியிலும் உள்ளது. இந்த எழுத்து தொடரை அடுத்து 4 சின்னங்கள் உள்ளன.

முதல் சின்னம் சுவஸ்திகை 2-வது திருவஸ்தா என்று அழைக்கப்படும் சின்னங்கள் இரண்டும் அடுத்தடுத்து உள்ளன. கடைசியாக உள்ள சின்னம் 5 கால்களுடைய சக்கரம்.

அச்சு முறை

நாணயத்தின் முழுமையான இடத்தை 5 கிளைகளுடைய மரச்சின்னம் அடைத்து உள்ளது. அழகான அச்சு முறையில் நாணயம் தயார் செய்யப்பட்டு உள்ளது. வார்ப்பு முறையில் அல்ல. இந்த நாணயத்தின் குறுக்களவு, எடை போன்றவைகளை வைத்து ரோமானிய செம்பு நாணயங்களுடன் ஒத்திருக்கிறதா என்று ஆய்வு செய்தேன். அதில் எனக்கு வியப்பு அளிக்கும் தகவல் கிடைத்தது.

லண்டன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள முக்கியமான ரோமன் நாணயங்களை பற்றிய தொகுப்பு நூலில் இதே குறுக்களவு இதே எடை கொண்ட நாணயம் இருப்பதை கண்டேன். பேரரசர் விக்டோரியஸ் வெளியிட்ட செம்பு நாணயத்தை இது ஒத்திருக்கிறது.

ரோமானியர்களுடன் தமிழர்கள் பல நூற்றாண்டு வாணிப தொடர்பு வைத்திருந்தனர். இந்த செம்பு ரோமன் நாணயத்தை ‘அன்டோனியனஸ்’ என்று அழைக்கின்றனர். கி.பி.269-ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்றும் அறிந்து கொண்டேன்.

ஆய்வின் முடிவு

இந்த நாணயத்தின் முன்புறம் யானையையும், பின்புறம் கிளைகளுடைய மரச்சின்னத்தையும் காண்கிறோம். அதேபோல சின்னங்களை கொண்ட நாணயங்களை தக்காணத்தில் கி.பி. 1-ம் நூற்றாண்டிலிருந்து 3-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த பெரும் வல்லமை பொருந்திய சாதவாகனர்களும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்துள்ளனர். சாதவாகனப்பேரரசர் வீழ்ச்சியுற்ற பின்னர் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறிய பழங்குடி அரசுகள் விடுதலை பெற்று தனி அரசுகளாக செயல்பட்டன.

தமிழ்நாட்டில் வட எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையில் இருந்த ஒரு மலைவாழ் மக்களின் தலைவன், தன் படையுடன் சங்க கால சேரர்களின் தலைநகரான கரூரை கைப்பற்றி இருக்கவேண்டும். சங்க காலத்தில் சேரர்கள் செல்வ செழிப்புடன் இருந்திருக்க வேண்டும். சங்க கால சேரர்கள் ரோமானியர்களுடன் 300 ஆண்டுகாலம் வாணிபம் செய்துள்ளனர்.

சேரர்களின் செல்வம்

ரோமானிய பேரரசர்களின் தங்கம், வெள்ளி, நாணய புதையல்கள் 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும், கோவை மாவட்டத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. சேரர்களின் செல்வத்தை இந்த புதையல்களில் இருந்து மதிப்பிடலாம்.

கலபர நாணயத்தின் முன் பக்கம் உள்ள 4 இலச்சினைகள், சங்க கால நாணயங்களில் காணப்படும் இலச்சினைகளை ஒத்திருக்கின்றன. அக்காலத்தின் இறுதி கட்டத்தில் இந்த கலபர நாணயம் வெளியிடப்பட்டிருக்கவேண்டும்.

கலபரர் ஆட்சி நூறு ஆண்டுகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. சாதவாகனர்களிடம் தளபதிகளாக இருக்க பல்லவர்கள் சாதவாகனர்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர் தங்கள் அரசை உருவாக்கி கொண்டு தமிழகத்தின் வட பகுதிகளை கைப்பற்றினர். கலபரர் ஆட்சியை கி.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவில் வீழ்த்தியிருக்கவேண்டும். இந்த ஆய்வின் முடிவு களப்பிரர்கள் நீண்ட காலம் ஆட்சி செய்தனர் என்று கூறுவது தவறு என்று எண்ணத்தோன்றுகிறது.

இவ்வாறு இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்