பாதுகாப்பு பணியில் இருந்த போது மாடு முட்டி பலி: போலீஸ்காரர் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி

பாதுகாப்பு பணியில் இருந்த போது மாடு முட்டி பலி: போலீஸ்காரர் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி

Update: 2017-03-03 21:00 GMT
சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம், கான்சாபுரம் கிராமத்தில் ஜனவரி 23-ந்தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஆயுதப்படை காவலர் வே.சங்கர், அழகுமுருகன் என்பவரை காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராதவிதமாக காளை மாடு முட்டி படுகாயம் அடைந்தார்.

அவருக்கு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்தார். மறைந்த காவலர் சங்கருக்கு முத்துசடச்சி (வயது 24) என்ற மனைவியும், குருபாண்டி என்ற 2 வயது மகனும், குருசாதனா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர்.

கருணை அடிப்படையில் பணி

மறைந்த காவலர் சங்கர் 1.3.2009 அன்று பணியில் சேர்ந்துள்ளதால் அவருடைய வாரிசான மனைவி முத்துசடச்சிக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் குடும்ப ஓய்வூதியம் பெற்று வழங்க அரசு விதிகளில் இடமில்லை. எனவே மறைந்த காவலர் சங்கருடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருடைய மனைவிக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை வழங்கி உடனடியாக பணி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அரசாணையை வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்