அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார்: டிடிவி தினகரன்

அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டிஉள்ளார்.

Update: 2017-03-03 14:00 GMT

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உள்கட்சி பூசலால் அ.தி.மு.க. சசிகலா அணி மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனைகளை கேட்டறிந்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ள நீதி கேட்கும் பயணம் மற்றும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் மேற்கொள்ள உள்ள உண்ணாவிரத போராட்டத்தின்போது செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்து பன்னீர்செல்வம் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்று இன்று ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் பல குற்றச்சாட்டுகள் பன்னீர்செல்வம் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுகவை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பன்னீர்செல்வம் செயல்படுகிறார், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் விரைவில் அடங்கி விடுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பட்டது. டிடிவி தினகரன் பதில் அளிக்கையில் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன் போன்றவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பி.எச்.பாண்டியன் என்னவெல்லாம் செய்தார் என்பது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு தெரியும். இன்றைக்கு அவருடன், இன்னொரு பி.எச்.பாண்டியனாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். தன்னால் முதல்-அமைச்சர் பதவியில் தொடர முடியாது என்ற காரணத்தால் அவர் இது போன்ற செயலில் ஈடுபடுகிறார். இதை பொது மக்களும், அ.தி.மு.க. தொண்டர்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வரும் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அரசியலில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள். 

மேலும் செய்திகள்