செங்கோட்டை- ஆரியங்காவு ரயில் சேவை, 7 ஆண்டிற்கு பிறகு நாளை துவக்கம்

செங்கோட்டை—ஆரியங்காவு ரயில் சேவை 7 ஆண்டிற்கு பிறகு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக ரயில் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Update: 2017-03-03 05:31 GMT
தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் ரயில் சேவையான செங்கோட்டை – புனலூர் இடையேயான, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 50 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதையை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2010, செப்., 20ல், இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அகல ரயில் பாதை பணி துவங்கிய போது, மூன்றாண்டுகளில் முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.  ஆனால் 7ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது தான் பணி நிறைவு அடைந்துள்ளது.

செங்கோட்டை – புனலூர் இடையே, எட்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, புது ஆரியங்காவு இடையே, 19 கி.மீ., தூர பாதையில், பாலங்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டது.

புது ஆரியங்காவில் இருந்து, எடப்பாளைம், கழுதுருத்தி, தென்மலை இடையே, 8 கி.மீ., தூரத்திற்கு பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது.

செங்கோட்டை- புனலூர் மீட்டர் கேஜ் பாதையில், பகவதிபுரம் – ஆரியங்காவு இடையே, 900 மீட்டர் குகை பாதை உள்ளது. கழுதுருத்தி – எடமண் இடையே ஒரு புது குகை பாதை உட்பட, நான்கு குகை பாதைகள் உள்ளன.

தற்போது, இதே வழியில் ஆறாவதாக, 165 மீ., நீளத்திற்கு, 70 கோடி ரூபாயில், ஒரு புதிய குகை அமைக்கப்பட்டுள்ளது.

பழைய குகைகள், 4.75 மீ., உயரமும், 2.25 மீட்டர் அகலத்துடன் இருந்தன. தற்போது, அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்தில், குகைகள், 6.85 மீ., உயரம், 2.76 மீ., அகலத்துடன் அமைக்கப்படுகின்றன.

மூன்றாவது குகை பாதைக்கும், தென்மலை ரயில் நிலையத்திற்கும் இடையே பாதை வளைவு, 12.03 டிகிரியாக இருந்தது. தற்போது, 10 டிகிரியாக மாற்றும் வகையில், இந்த புதிய குகை அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாதையில், 13 கண் பாலம், வளைவு பாலங்கள் உட்பட,19 பெரிய பாலங்கள் உள்ளன.

7 ஆண்டுகள் நடந்து வந்த பணி நிறைவு அடைந்ததையடுத்து, நாளை சென்னை வரும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் செங்கோட்டை— ஆரியங்காவு அகல ரயில்பாதை திட்டத்தை துவக்கிவைக்கிறார்.

மேலும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பதற்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வை—பை வசதியும் துவங்கி வைக்கிறார். என அமைச்சர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்