ஆற்று மணலுக்கு பதில் கருங்கல் ஜல்லி மணலை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்

கட்டுமான பணிக்கு ஆற்று மணலுக்கு பதில் கருங்கல் ஜல்லி மணலை பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-03-02 21:42 GMT
சென்னை,

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எம்.அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ஜல்லி மணல்

தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளை அழித்தும், ஆக்கிரமித்தும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீடுகளை கட்டி வருகிறது. இதனால் 390 டி.எம்.சி.யாக இருக்க வேண்டிய தண்ணீர் இருப்பு 250 டி.எம்.சி.யாக குறைந்துவிட்டது. மழையின் அளவும் கடந்த ஆண்டு குறைந்துவிட்டதால் நீர்நிலைகள் வறண்டுபோய் உள்ளன. இதனால் விவசாயம் பாழ்பட்டு, அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் குவாரிகளாலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணலுக்கு பதிலாக, கருங்கல் ஜல்லி மணலை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆற்றுப்படுகைகளில் செயல்பட்டுவரும் மணல் குவாரிகளுக்கு தடைவிதித்து, கட்டுமான பணிகளுக்கு ஜல்லி மணலை பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பரிசீலிக்க வேண்டும்

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்காத நீதிபதிகள், ஆற்று மணலுக்கு பதில் கருங்கல் ஜல்லி மணலை பயன்படுத்தும் திட்டம் ஏற்கனவே இருக்கும்போது, அதை ஏன் இதுவரை அரசு பரிசீலிக்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்து முடிவினை தமிழக அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்